போக்குவரத்துத் துறையின் ஜாம்பவானான கம்ஃபர்ட்டெல்குரோ, அதன் முதல் ஆறு மாதங்களில் 30.4% லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த இவ்வாண்டின் முதல் பாதியில் நிறுவனம் மொத்தம் $118.7 மில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது.
உலகநாடுகள் கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து மீண்டுவரும் வேளையில், வருவாய் 6.7% அதிகரித்து $1.86 பில்லியனாகப் பதிவானது. செயல்பாட்டுச் செலவுகள் 4.8% அதிகரித்து $1.68 பில்லியனாகப் பதிவானது.
சீனாவைத் தவிர, நிறுவனம் செயல்பட்டுவரும் மற்ற அனைத்து நாடுகளிலும் ஆண்டின் முதல் பாதியில் பொருளியல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கம்ஃபர்ட்டெல்குரோ தெரிவித்தது.
குழுமத்தின் பொதுப் போக்குவரத்துச் சேவைப் பிரிவு, கணிசமான அளவில் தேறியிருந்ததாகவும் கூறப்பட்டது. செயல்பாட்டு ஆதாயம் 48.8% அதிகரித்திருந்ததுடன் டாக்சி வர்த்தகத்தின் செயல்பாட்டு ஆதாயமும் 18.4% அதிகரித்திருந்தது.
சிங்கப்பூரின் ரயில் பயணங்கள், ஆஸ்திரேலியாவின் வாடகைப் பேருந்துகள், பிரிட்டனின் பேருந்துச் சேவைகள் ஆகியவை தொடர்ந்து மீண்டுவருவதாகக் கூறப்பட்டது.

