சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டுச் சென்றது தவறுதான் என்று கணவர் ஒப்புக்கொண்டார்
ஆடம்பர பொருள்கள் தொடர்பான மோசடிகளில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறப்படும் ஒரு தம்பதி நேற்று பிற்பகலில் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்கள்.
இந்த விவகாரத்தில் மொத்தம் $32 மில்லியன் மதிப்புள்ள பொருள்கள் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பி ஜியாபெங், 26, என்ற ஆடவர் மீதும் தாய்லாந்து நாட்டவரான பன் சுக் சிரிவிப்பா என்ற 27 வயதுள்ள அவருடைய மனைவி மீதும் தலா மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் இரண்டு குற்றச்சாட்டுகள் ஏமாற்றியது தொடர்பானவை.
மற்றொரு குற்றச்சாட்டு, சிங்கப்பூரைவிட்டு அவர்கள் சட்டவிரோதமாக வெளியேறியதாகக் கூறுகிறது. அந்தத் தம்பதியர் இருவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் ஜூன் மாதத்துக்கும் இடையில் வாடிக்கையாளர்கள் பலரையும் ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அந்த இருவரும் காணொளி மூலம் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவர்களிடம் படித்து காட்டப்பட்டன.
அந்த இருவரையும் ஒரு வார காலம் விசாரணைக்காவலில் வைக்கும்படி மாவட்ட நீதிபதி பிரண்டா டான் உத்தரவிட்டார்.
நேற்றைய விசாரணையில் அந்த இருவரின் சார்பில் யாரும் வாதாடவில்லை. அவர்கள் இரு வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள்.
ஆடம்பரமான கைக்கடிகாரங்களையும் விலை உயர்ந்த கைப்பைகளையும் விற்பதாகக் கூறி பலரையும் நம்ப வைத்து அந்த இருவரும் அவர்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த இருவரும், 'டிரேட்நேஷன்', 'டிரேட் லக்சூரி' என்ற பெயருள்ள நிறுவனங்கள் வழியாக இந்த மோசடிகளைச் செய்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
அந்த இருவரிடம் ஏமாந்தவர்கள் $20 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் எந்தப் பொருளையும் அவர்கள் பெறவில்லை என்று விசாரணையின்போது அரசுத் தரப்பு வழக்குரைஞர் கூறினார்.
பி ஜியாபெங் ஜூன் 27ஆம் தேதி கைதானார். அவருக்கு $15,000 பிணை அனுமதிக்கப்பட்டது. அந்த இருவரின் கடவுச்சீட்டுகளை அதிகாரிகள் முடக்கிவிட்டனர். ஆனால், ஜூலை 4ஆம் தேதி அந்த இருவரும் சட்டவிரோதமாக தரை எல்லை வழி சிங்கப்பூரைவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த இருவரும் தப்பிக்க உதவியதாகக் கூறப்படும் இரண்டு மலேசியர்கள் மீது ஏற்கெனவே குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
தப்பிவிட்டதை அடுத்து தம்பதியர் இருவரையும் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மலேசிய காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அந்த இருவரையும் கைதுசெய்து அதேநாளன்று சிங்கப்பூர் காவல்துறை யிடம் ஒப்படைத்தனர்.
இந்த விவகாரத்தில் 180க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறையிடம் தாக்கலாகி இருக்கின்றன. புலன்விசாரணை தொடக்கக் கட்டத்தில் இருக்கிறது என்று அரசுத் தரப்பு தெரிவித்து உள்ளது.
இதனிடையே, நேற்று நீதிமன்ற விசாரணையின்போது பேசிய பி ஜியாபெங், தாங்கள் சட்டவிரோதமாக சிங்கப்பூரைவிட்டு வெளியேறியது தவறு என்றார்.
புலன்விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரப்போவதாகவும் அவர் கூறினார். அதேபோலவே அவரின் மனைவியும் தெரிவித்தார்.

