பெண் சிறைக் கைதிகள் கை வண்ணத்தில் உருவாகும் ஐந்து புலி அலங்கார விளக்குகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை கரையோரப் பூந்தோட்டங்களில் நடக்கும் வருடாந்திர இலையுதிர்கால திருவிழாவை அலங்கரிக்க இருக்கின்றன.
'மறுஐக்கியம்' என்பது அந்த விழாவின் இந்த ஆண்டின் கருப்பொருள். விழாவுக்கு எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனத்தின் சீன ஊடகக் குழுமமும் ஒரு பங்காளியாக இருக்கிறது.
பெண் கைதிகள் உருவாக்கும் அலங்கார விளக்கு ஒவ்வொன்றும் 1.4 மீட்டர் விட்டம், 1.5 மீட்டர் உயரம் உள்ளவை. அவை சீனர்களின் மங்கலகரமான ஐந்து அம்சங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து நிறங்களில் உருவாகின்றன.
மகிழ்ச்சி (மஞ்சள்), உடல்நலம் (பசுமை), காதல் (சிவப்பு), நீண்ட ஆயுள் (நீலம்), அமைதி (வெள்ளை) ஆகியவை அந்த ஐந்து மங்கலகரமான அம்சங்களாகும்.
அந்த அலங்கார விளக்குகளை 19 பெண் கைதிகள் வடிவமைத்து அவற்றுக்கு வண்ணம் தீட்டி உருவாக்கி இருக்கிறார்கள்.
மஞ்சள் நாடா திட்டத்தின் 'சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கலைகள்' என்ற செயல்திட்டத்தையொட்டி அந்த விளக்குகள் உருவாகி இருக்கின்றன.
சாங்கி சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஏ4 நிலையம் முற்றிலும் பெண்களுக்கு உரியதாகும். அங்கு அந்தக் கைதிகள் அந்த விளக்குகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தனர்.
புலி விளக்குகளில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுவது ஏன் என்பதை அவர்கள் விளக்கினர்.
"இத்தகைய ஓவியத்தில் எங்களுக்கு அனுபவம் கிடையாது. ஆகையால், இது ஒரு சவாலாக இருந்தது. ஆனால் ஊக்கம், உறுதி காரணமாக செம்மையாக இதை நாங்கள் செய்து முடித்து இருக்கிறோம்," என்று உடல்நலத்தைப் பிரதிபலிக்கும் பச்சைநிற விளக்குக்கு வண்ணம் தீட்ட உதவிய ஃபாரா, 47, (உண்மை பெயர் அல்ல) என்ற ஒரு பெண் கைதி கூறினார்.
2020ல் தொடங்கிய சிறைக் கைதி களுக்குப் பின்னால் கலைகள் செயல்திட்டம் கைதிகள் புதுத் தேர்ச்சிகளைக் கற்றுக்கொள்ளவும் புதியவர்களாக மாறி வாழ ஒரு வழியையும் திட்டம் ஏற்படுத்தித் தருகிறது. அதில் கலந்துகொள்ளும் கைதிகள் திருந்துகிறார்கள்.

