தாய்லாந்து சாலை விபத்தில் சிங்கப்பூர் பெண் மரணம், காரில் இருந்த மேலும் நால்வர் காயம்

தாய்லாந்து சாலை விபத்தில் சிங்கப்பூர் பெண் மரணம், காரில் இருந்த மேலும் நால்வர் காயம்

1 mins read
be81af3d-c26b-4901-a4a8-3d9c67c931db
கோப்புப்படம்: ஏஎப்பி -

தாய்லாந்தின் புக்கெட் நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிங்கப்பூரரான மாது ஒருவர் கொல்லப்பட்டார். அவர் சென்று கொண்டிருந்த கார், ஒரு சிறிய சுற்றுலாப் பேருந்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

மியாங் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு அந்த விபத்து பற்றி தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது என்று பேங்காங்க் போஸ்ட் செய்தித்தாள் குறிப்பிட்டது.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு காவல்துறை அதிகாரிகளும் மீட்புப் பணி ஊழியர்களும் விரைந்தனர்.

அங்கு ஒரு டொயோட்டா கார் மிகவும் சேதம் அடைந்து கிடந்தது. ஒரு சிறிய பேருந்தின் கண்ணாடியும் உடைந்து இருந்தது.

குமாரி ரீனி ஹொ ஜியா ஹுய், 21, என்ற மாது சுயநினைவை இழந்த நிலையில் அங்கு காணப்பட்டார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் அந்தப் பெண் மாண்டுவிட்டார். அவருடன் காரில் பயணம் செய்த இதர நான்கு சிங்கப்பூரர்களும் காயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தை ஓட்டிச் சென்ற தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் பேருந்தில் இருந்த இரண்டு சுற்றுலா வழிகாட்டிகளும் காயமடைந்தனர்.

அந்த வழிகாட்டிகளில் ஒருவர் தாய்லாந்தைச் சேர்ந்தவர். மற்றொருவர் தென் கொரியர் என்று தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்தச் செய்தித்தாள் மேலும் தெரிவித்தது.

குமாரி ஹொ காரை ஓட்டிச் சென்றதாகவும் ஒரு சரிவில் கார் சென்றபோது அவர் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் தெரியவந்தது. புலன்விசாரணை தொடர்கிறது.