மின்னிலக்கமயமானாலும் பிறப்புச் சான்றிதழில் தாய்மொழி விவரம்

மின்னிலக்கமயமானாலும் பிறப்புச் சான்றிதழில் தாய்மொழி விவரம்

4 mins read
fe365f24-8d0f-452a-9dbc-8aadcd639674
-

மின்­னி­லக்கமயத்­துக்கு மாறு­வ­தைப் பொறுத்­த­வரை சிங்­கப்­பூர் முன்­னோடி நாடுகளில் ஒன்­றாக இருக்கிறது. நிறு­வனங்­கள், மக்­கள் உள்­ளிட்ட அனைத்­தை­யும் உள்­ள­டக்கி மின்­னி­லக்­க­ம­யத்தை நாடு வேகப்­ப­டுத்தி வரு­கிறது.

கொரோனா பாதிப்பு கார­ண­மாக 2019ஆம் ஆண்டு முதல் இந்த இயக்­கம் மேலும் வேகம் எடுத்­துள்­ளது. மின்­னி­லக்கமயத்­தைத் தழு­விக்­கொள்­வ­தில் அர­சு முன்­னின்று வழிகாட்டியாகச் செயல்­ப­டு­கிறது. அதன் சேவை­கள் அனைத்­தும் கூடு­மா­ன­வரை வேக­மாக மின்­னி­லக்கமயமாகி, உருமாறி ­வருகின்­றன.

காலத்­திற்கு ஏற்ற, குறிப்­பாக சிங்­கப்­பூ­ருக்­குப் பொருத்­த­மான இந்த மாற்­றத்­தின் பலன் ஏரா­ளம் என்­பது கண்­கூ­டா­கி ­வ­ரு­கிறது. பல்­வேறு பணிகளை யும் வச­தி­யாக, எளி­தாக, விரை­வாக, குறை­யின்றி, இருந்த இடத்­தில் இருந்­த­ப­டியே செய்து முடிக்க மின்­னி­லக்கமயம் பெரும் உத­வி­யாக இருக்­கிறது.

அர­சாங்­கம் தனது மின்­னி­லக்­க­மய முயற்­சியை ஒட்டி கடந்த ஜூலை மாதம் 6ஆம் தேதி புதிய சட்­டம் ஒன்றை நாடாளுமன்­றத்­தில் நிறை­வேற்­றியது. பிறப்பு, இறப்பு பதி­வுச் சட்­டம் என்ற அந்­தச் சட்டம், 1937ஆம் ஆண்டில் நடப்­புக்கு வந்த ஒரு சட்­டத்­திற்குப் பதி­லாக இடம்­பெ­று­கிறது.

பிறப்பு, இறப்பு, மர­ணம் அடைந்த நிலை­யில் குழந்தை பிறப்­பது அனைத்­தை­யும் அதிகா­ரி­களுக்குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டியது புதிய சட்டப் படி கட்டாயமானது. புதிய சட்டத்தின்படி, பிறப்பு, இறப்பை பதியும் நடை­மு­றை­யும் அவற்றை அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­யப்­ப­டுத்துவதற்­கான நடை­மு­றை­யும் செம்­மை­யாக மாற்றி அமைக்­கப்­பட்­டு உள்­ளன.

இத­னை­யொட்டி, மின்­னி­லக்கப் பிறப்புச் சான்றி தழ்­கள் அறி­மு­க­மா­யின. வழக்­க­மாக கையில் கொடுக்­கப்­படும் காகித அச்சு சான்­றி­த­ழுக்­குப் பதி­லாக மே 29ஆம் தேதி முதல் மின்­னி­லக்கப் பிறப்­புச் சான்­றி­தழ்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

தங்­கள் குழந்தை பிறந்தது பற்றி பெற்­றோர் இணையம் வழி­யாக தெரி­யப்­ப­டுத்­தும் ஏற்­பா­டும் நடப்­புக்கு வந்­துள்­ளது. அப்­போது பிள்­ளை­யின் பெற்­றோ­ரின் தாய்­மொழி, போன்ற பல்­வேறு தகவல் களும் பெறப்­பட்டு அவை எல்­லாம் அவர்­க­ளின் சிங்­பாஸ் பக்­கத்­தில் பதி­யப்­படும்.

சிங்­பாஸ் கணக்­கு­டன் கூடிய சிங்­கப்­பூ­ரர்­கள் சிங்­பா­ஸில் அத்தகைய விவ­ரங்­க­ளைக் காண­லாம்.

என்­றா­லும் மின்­னி­லக்­கப் பதிவு முறையை எளிமை­யாக்­கும் வகை­யில் மின்­னி­லக்க பிறப்­புச் சான்­றி­த­ழில் பல விவ­ரங்­கள் இடம்­பெறவில்லை. கொள்­கை­கள், இதர நிர்­வா­கத் தேவை­களுக்கு அவ­சி­ய­மில்­லாத விவ­ர­ங்கள் மின்­னி­லக்­கச் சான்றி­தழில் இல்லை. அப்­படி விடு­பட்ட விவ­ரங்களில் பெற்­றோ­ரின் தாய்­மொழியும் ஒன்று.

பெற்­றோ­ரின் தாய்­மொழி ஒரு­புறம் இருக்க, வழக்­க­மான பிறப்­புச் சான்­றி­த­ழில் இடம்­பெற்று இருக்­கும் இதர பல விவ­ரங்­களும் மின்­னி­லக்க சான்­றி­த­ழில் இல்லை.

பெற்­றோ­ரின் பிறந்த நாடு, தாயா­ரின் முகவரி விவ­ரங்­கள், பிள்­ளை­யின் பிறந்த இடப் பதிவு உள்ளிட்ட பல­வும் புதிய மின்­னி­லக்­கச் சான்­றி­தழில் இல்லை. புதிய மின்­னி­லக்­கச் சான்­றி­த­ழில் தாய்மொழி பற்­றிய விவ­ரம் இல்­லா­மல் இருப்­ப­தைக் கண்டு பல பெற்­றோரும் சமூ­கத் தலை­வர்­களும் கவலை தெரி­வித்­த­னர்.

இப்­போ­தைய பிள்­ளை­கள், தாய்­மொழியைச் சரி­யா­கப் பேசக்­கூட தெரி­யா­மல் சங்­க­டப்­ப­டு­கி­றார்­கள். இந்­தச் சூழ்­நி­லை­யில், பிற்­பாடு அவர்­கள் தங்­கள் தாய்­மொழி என்ன என்­ப­தைக்­கூட தெரிந்­து­கொள்ள முடி­யாத சூழ்­நிலை ஏற்­பட்­டு­வி­ட­லாம் என்று சிலர் கவலை தெரி­வித்­த­னர்.

தங்­க­ளு­டைய மூதா­தை­யர்­கள் பற்­றி­யும் தாய்­மொழி பற்­றி­யும் இளை­ய­ருக்கு அவ்­வ­ள­வா­கத் தெரி­யாத சூழல் இருக்­கிறது. இந்த நிலை­யில், பிறப்­புச் சான்­றி­த­ழில் அந்த விவரங்களைப் பதி­ய­வைத்து அர­சாங்­கம் உதவ வேண்­டும் என்று சிலர் குரல்­கொ­டுத்­த­னர்.

அத்­த­கைய சான்­றி­த­ழில் தாய்­மொழி உள்­ளிட்ட விவ­ரங்­கள் இல்­லா­த­தால் பின்­னர் வேர் அறுந்து போய்­வி­டக்­கூ­டிய நிலை இளை­யர்­க­ளுக்கு ஏற்­ப­ட­லாம் என்­று­கூட சிலர் அச்­சம் தெரி­வித்­த­னர்.

தாய்­மொழி என்ன என்­பது புரி­யா­மல் இருக்­கும் நிலை­யில், தங்கள் முன்­னோ­டி­கள் பற்றி தெரியாம லேயே போய்­வி­டக்­கூ­டும்; எதிர்­கால தலை­மு­றையின் நல்­வாழ்வை உத்­தே­சித்து தங்­க­ளு­டைய பூர்வீக இடத்தை எல்­லாம் விட்­டு­விட்டு இங்கு வந்து குடியேற அவர்­கள் செய்த தியா­கங்­களை எல்­லாம் இளை­யர்­கள் மறந்­து­வி­டக்­கூ­டிய சூழ்­நி­லைக்­கூட வர­லாம் என்­றும் சிலர் கவலை தெரி­வித்து இருந்­த­னர்.

இவற்றை எல்­லாம் செவி­ம­டுத்த அர­சாங்­கம், மின்­னி­லக்­கச் சான்­றி­த­ழில் தாய்­மொழி விவ­ரத்தைச் சேர்க்­கப்­போ­வ­தாக அறி­வித்து இருக்­கிறது.

புதி­தாக பிறக்­கும் குழந்­தை­யின் பெற்­றோ­ரின் தாய்­மொ­ழி­கள் மின்­னி­லக்க பிறப்­புச் சான்­றி­த­ழில் சேர்க்­கப்­படும் என்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் அறி­வித்தது.

வரும் செப்­டம்­பர் மாதம் முதல் கொடுக்­கப்­படும் மின்­னி­லக்­கப் பிறப்­புச் சான்­றி­த­ழில் பிள்­ளை­யின் தாய், தந்தை இரு­வ­ரின் தாய்­மொழி விவ­ரம் இருக்கும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மே 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மின்­னி­லக்­கப் பிறப்­புச் சான்­றி­த­ழைப் பெற்றிருப்­போர், செப்­டம்­பர் 1ல் இருந்து அவற்றை புதிதாக பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ள­லாம். அதற்குக் கூடுதல் செலவும் இருக்­காது.

இந்த அறி­விப்பை பல­ரும் வர­வேற்று இருக்­கிறார்­கள். இதன்­மூ­லம் இளம் தலை­முறை தங்­களைப் பற்றி நல்­ல­மு­றை­யில் தெரிந்­து­கொண்டு பாரம்­ப­ரி­யத்தை, மொழி­யைக் காக்க பாடு­ப­டு­வார்­கள் என்று பலர் நம்­பிக்கை தெரி­வித்­த­னர்.

பிறப்­புச் சான்­றி­த­ழில் தாய்­மொழி உள்­ளிட்ட விவ­ரம் இருக்­கும் என்­ப­தால் தாங்­கள் யார் என்பதற்­கான அடை­யா­ள­மாக அது திக­ழும் என்று சொல்லி, தங்­க­ளு­டைய கோரிக்­கைக்குச் செவி­சாய்த்து செயல்­பட்டு இருக்­கும் அர­சாங்­கத்தைப் பல­ரும் பாராட்டி இருக்­கி­றார்­கள்.

இனி­மேல் பிறப்­புச் சான்­றி­தழ்­கள் மின்­னி­லக்க வடி­வில்­தான் இருக்­கும் என்ற நிலை­யில், உலகம் எப்படி உருமாறினாலும் மின்னிலக்கமய யுகம் தொடங்கினாலும் தாய்மொழி என்பது மாறாதது. அது உடன்வர வேண்டிய ஒன்று என்பதை அரசின் இந்த முயற்சி உறுதிப்படுத்தும்.