ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் செயல்படும் இரவு நேர கேளிக்கை விடுதிகளின் பொழுதுபோக்கு உரிமங்கள் இனிமேல் புதுப்பிக்கப்படமாட்டா. சட்ட ஒழுங்குப் பிரச்சினையே இதற்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
அந்தக் கட்டடத்தில் அத்தகைய விடுதிகளை நடத்துவோருக்குச் சென்ற மாதம் அதிகாரத்துவ அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. அடுத்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு பொதுப் பொழுதுபோக்கு உரிமம் புதுப்பிக்கப்படாது என்று அந்தக் கடிதம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது.
சட்ட ஒழுங்குப் பிரச்சினையே இதற்கான காரணம் என்று குறிப்பிட்ட காவல்துறை, உரிமம் புதுப்பிக்கப்படாது என்பதால் 12 வர்த்தக விடுதிகள் பாதிக்கப்படும் என்றும் கூறியது.
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கட்டடத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை கவலை தருவதாகவே இருக்கிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் அந்தப் பிரச்சினை தீர்வதாக இல்லை என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்தது.

