சிங்கப்பூர் நாணயம் வலுவாக இருப்பதால் தாங்கள் அதிக பணத்தை தங்கள் குடும்பத்திற்கு அனுப்ப முடிகிறது என்று இங்கு வேலை பார்க்கும் மலேசிய ஊழியர்கள் கூறுகிறார்கள்.
இருந்தாலும் சிங்கப்பூரில் வாடகை அதிகமாக இருப்பதும் தங்கள் நாட்டில் விலைவாசி அதிகரித்து இருப்பதும் தங்களுக்குக் கவலை தருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மலேசிய ரிங்கிட்டிற்கு எதிரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சாதனை அளவாக அதிகரித்து இருக்கிறது.
அதனால் மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் கூச்சிங்கில் வசிக்கும் தன் பெற்றோருக்கு ஒவ்வொரு முறையும் அதிக பணத்தை அனுப்ப முடிகிறது என்று செங்காங் பொது மருத்துவமனையில் வேலை பார்க்கும் சாரா லியோங், 26, என்ற தாதி கூறினார். சிங்கப்பூரில் மூன்று ஆண்டு தாதியாக படித்த இவர், இங்கு ஐந்து ஆண்டுகளாக வேலை பார்க்கிறார்.
மலேசியாவில் குடியுரிமை பெற்றவரான அந்தத் தாதி, சிங்கப்பூர் நிரந்தரவாசியும் ஆவார். இன்னமும் திருமணம் ஆகவில்லை. ஒவ்வொரு முறையும் $500 முதல் $700 வரை அவர் அனுப்புகிறார்.
இதனால் மலேசியாவில் வாழும் அவருடைய பெற்றோருக்கு அதிகப் பணம் கிடைக்கிறது.
அங் மோ கியோவில் தான் வசிக்கும் வீவக ஐந்தறை வீட்டுக்கு அவர் இப்போது $2,600 வாடகை கொடுக்கிறார். இந்த வாடகை விரைவில் அதிகரிக்கக்கூடுமென தாதி கவலைப்படுகிறார்.
அந்தத் தாதியின் சகோதரியும் இங்கு தனியார் மருத்துவமனையில் தாதியாக வேலை பார்க்கிறார். அந்த வீட்டில் மொத்தம் இவரையும் சேர்த்து நான்கு பேர் தங்கி இருக்கிறார்கள்.
மலேசிய ரிங்கிட்டுக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு இம்மாதம் 4ஆம் தேதி சாதனை அளவாகக் கூடியது. வெள்ளிக்கு 3.24 ரிங்கிட் என்ற அளவை எட்டியது. இந்தப் பரிவர்த்தனை விகி தம் ஓராண்டுக்கு முன் வெள்ளிக்கு 3.10 ரிங்கிட்டாக இருந்தது.
சிங்கப்பூர் நாணயம் இந்த வட்டாரத்தின் இதர நாணயங்களுக்கு எதிராகவும் மதிப்பு கூடியுள்ளது.
பணவீக்கத்தை மெதுபடுத்தும் நோக்கத்தில், நாணயக் கொள்கையை இறுக்குவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் அறிவித்தது. அதையடுத்து சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு கூடி வருகிறது.
இதனிடையே, மதிப்பு அதிகரிப்பு பற்றிக் கூறிய 'சிங்எக்ஸ்' என்ற பணப்பட்டுவாடா நிறுவன தலைமை நிர்வாகியான அட்டுல் கார்க், சிங்கப்பூர் வெள்ளி வலுவடைவதை இங்கு பணியாற்றும் மலேசியர்கள் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
அவர்கள் அதிக பணத்தை இப்போது தங்கள் குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். அது அவர்களின் குடும்பத்துக்குப் பேருதவியாக இருக்கிறது என்றார் அவர்.
சிங்கப்பூர் நாணயம் வலுவாக இருப்பதால் மேலும் பல மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வேலை பார்க்க வருவார்கள் என்று 'மேபேங்க் செக்யூரிட்டி சிங்கப்பூர்' நிறுவனத்தின் மூத்த பொருளியல் வல்லுநரான டாக்டர் சுவா ஹாக் பின் கூறினார்.
சிங்கப்பூரில் ஏறத்தாழ 900,000 மலேசியர்கள் வேலை பார்க்கிறார்கள் என்று கடந்த ஜூன் மாதம் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு வெளியிட்ட மதிப்பீடுகள் மூலம் தெரிகிறது. அவர்கள் இங்கேயே வசிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, அன்றாடம் ஏறத்தாழ 300,000 பேர் வேலைக்காக இங்கு வந்து செல்கிறார்கள்.
இதனிடையே, சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரித்து வரும் அதேவேளையில், மலேசியாவில் விலைவாசியும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக உணவுக்கும் போக்குவரத்துக்கும் அதிகமாக செலவிட வேண்டி இருக்கிறது என்று திருவாட்டி வோங் என்ற 34 வயது மலேசியர் தெரிவித்தார்.
திருவாட்டி வோங் ஒற்றையர். சிங்கப்பூரில் தொடர்புத்துறை நிறுவனம் ஒன்றில் அவர் வேலை பார்க்கிறார். ஒவ்வொரு மாதமும் மலேசியாவில் இருக்கும் தன் தந்தைக்கு அவர் ஏறத்தாழ $1,000 முதல் $1,500 வரை அனுப்புகிறார்.
இவ்வேளையில், சிங்கப்பூரில் வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து அதிகரிக்கிறது. வீவக வீடுகளுக்கான வாடகை தொடர்ந்து 24வது மாதமாக கடந்த ஜூன் மாதம் கூடியது. அதேபோல, தனியார் அடுக்குமாடி வீடுகளின் வாடகையும் தொடர்ந்து 18 மாதமாக அதிகரித்தது.
இருந்தாலும்கூட சிங்கப்பூரில் வேலை பார்ப்பது, மலேசியாவின் சிரம்பானில் இருக்கும் தன் குடும்பத்திற்கு முன்பைவிட சிறந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று கேலாங்கில் சிகை அலங்கார நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் கான் கா ஃபாய், 33, என்ற மலேசியர் தெரிவித்தார்.
இவர், மாதம் $500 அனுப்புகிறார். அதன் காரணமாக மலேசியாவில் வசிக்கும் இவருடைய குடும்பத்தினர் சிறிய காருக்குப் பதில் பெரிய கார் வாங்கியுள்ளனர்.

