மோனலிசா
ஈராண்டுகளுக்குப் பிறகு திருவிழாக்கோலம் பூண்டது, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம். பாரம்பரியக் கலைகளைக் கொண்டாடும் வகையில் நிலையத்தின் 45ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தேறியது. இம்மாதம் ஆறாம் தேதியன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற்ற பரிசளிப்பு விழா, மாணவர்களின் முயற்சிகளைக் கொண்டாடி, அவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
பாரம்பரிய பறை இசையுடன் தொடங்கிய இந்தநிகழ்ச்சி, 'உள்ளத்தனையது உயர்வு' என்னும் கருப்பொருளில் அமைந்திருந்தது.
உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2021ஆம் ஆண்டு கல்வி செயல்திறனில் சிறந்துவிளங்கிய 38 மாணவர்கள், இவ்வாண்டு கல்வியில் மேம்பாடு கண்ட 20 மாணவர்கள், சிறப்பு விருதுகள் பெற்ற இரண்டு மாணவர்கள், உன்னத விருது பெற்றவர் உள்பட மொத்தம் 61 பேருக்கு விருதுகள் கிடைத்தன.
இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சின்
சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தின் தமிழ்மொழிக்கான தலைமை முதன்மை ஆசிரியரான முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியன் வருகையளித்திருந்தார்.
தமிழ்மொழி மீது ஆர்வமும் தமிழ்மொழி சார்ந்த நிகழ்வுகளில் அதீத ஈடுபாடும் கொண்ட சமிஸ் ஜஸ்ரா, 17, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் 2021ஆம் ஆண்டிற்கான உன்னத விருதைப் பெற்றார். தற்சமயம் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழ்மொழியுடன் ஆரம்பகால கல்வியில் பட்டயப் படிப்பு பயின்று வருகிறார் இவர். இவ்விருது கிடைத்துள்ளது தனக்குப் பெரும் ஊக்கத்தைத் தந்துள்ளதாகக் கூறிய சமிஸ் ஜஸ்ரா, எதிர்காலத்தில் தமிழ்
மொழிக்கு அதிகத் தொண்டாற்ற விரும்புவதாகவும் கூறுகிறார்.
விருது பெற்றவர்களுள் ஒரு
வரான மணிகண்டன் ஸ்வேதா, 16, தனக்கு உந்துசக்தியாக இந்தவிருது அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். ஓர் இளையராக தமிழ்மொழிக்குத் தொண்டாற்ற இது தன்னை ஊக்குவிப்பதாகவும் கூறினார், 'செயல்வழி விழுமியம்' பிரிவில் சிறப்பு விருது பெற்ற ஸ்வேதா.
தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் உயர்நிலை 4ல் பயின்றுவரும் இவர், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் தமிழ் இலக்கியப் பாடத்தில் இணைந்தவர். தன் கல்விப் பயணத்திற்கு ஆசிரியர்களும் பெற்றோரும் மிகுந்த ஆதரவு அளித்ததாக இவர் கூறுகிறார்.
தமிழ் நிகழ்வுகளில் கலந்துகொள்வதே தமக்கு இன்பம் அளிப்பதாகவும் இவர் தெரி வித்தார். 'செயல்வழி விழுமியம்' பிரிவில் சிறப்பு விருது பெற்ற மற்றொரு மாணவியான கமலக்கண்ணன் யாழினி, 16. தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் உயர்நிலை 4 பயின்று வரும் இவர், தன் தாயார் முன்னிலையில் விருதுபெற்றது மிகவும் பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
விழாவில் கலந்துகொண்ட மாணவ மாணவியருக்குப் பல்வேறு மரபுக் கலைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
தெருக்கூத்து, ஒயிலாட்டம், கோலாட்டம், கரகம், கபடி, பொய்க்கால் குதிரை, உறியடி, சிலம்பம், மரக்காலாட்டம் உள்ளிட்ட மரபுக்கலைகளுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்புகளை 'ஏகேடி கிரியேஷன்ஸ்' ஏற்பாடு செய்திருந்தது.
விழாவில் கலந்துகொண்ட புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியின் உயர்நிலை 2 மாணவர் கிருஷ்ணன் மோனிஷ், 14, "பல புதிய கலைகளை நேரில் கண்டது உற்சாகத்தை அளிக்கிறது. மாணவர்களுக்கு இவ்வாறு மரபுக் கலை களின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுப்பது பயனளிப்பதாக உள்ளது," என்றார்.
புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை 3ல் பயிலும் மாணவி அர்ஷிதா முருகானந்தம், 13, "என் நண்பர்களுடன் சேர்ந்து கபடி விளையாடினேன். முதல்முறையாக விளையாடிய எனக்கு, பயிற்சியாளர் அடிப்படை விதி
முறைகளைக் கற்றுத்தந்தார். இந்த விளையாட்டு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது," என்று பகிர்ந்தார்.
சிங்கப்பூரிலேயே முதன்முறையாக உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் இந்திய நிகழ்த்துகலை வகுப்பில் பறையிசை, முறைப்படி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. அஷ்வினி செல்வராஜ் மாணவர்களுக்கு பறையிசைப் பயிற்சியை வழங்கிவருகிறார்.
பரிசளிப்பு விழாவில் பறையிசையை முதல் நிகழ்வாகப் படைத்துக்காட்டினர். அவர்களுடன் தமிழ் திருவிழாவிற்
கெனச் சிறப்பு வருகை தந்த தமிழகத்தின் தொழில்முறைப் பறை
யிசைக் கலைஞர் திரு தங்கப்பாண்டி, இணைந்து படைப்பை மெருகேற்றினார்.
இவ்வாறு மாணவர்களின் ஆற்றலை மட்டும் பாராட்டாது மரபுக் கலைக் கலைஞர்களைத் தட்டிக்
கொடுத்தும் உள்ளது, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் 45ஆவது ஆண்டு பரிசளிப்பு விழா.

