கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸ் கட்டடத்தில் உள்ள ஓர் உணவகத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை சாப்பிட சென்றவர்களுக்கு 'அனல்பறக்கும்' சம்பவம் நேர்ந்தது.
சுடச்சுட 'மூக்காட்டா' என்று அழைக்கப்படும் 'தாய் ஹாட்போட்' சாப்பிட்டுகொண்டிருந்தவர்களின் மேசையில் வைக்கப்பட்ட அடுப்பு திடீரென்று தீ பற்றிக்கொண்டது. இந்தச் சம்பவத்தின் காணொளி டிக்டாக் தளத்தில் பதிவுசெய்யப்பட்டது.
மேசையின் நடுவில் வைக்கப்பட்ட அடுப்பு தீ பற்றிக்கொண்டதில் மேசை முழுவதும் தீ பரவியது. வாடிக்கையாளர்களும், கடைக்காரர்களும் தீயை அணைக்க முயன்றனர். ஒருவர் ஒரு துணியைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்.
இந்நிலையில் அருகில் சாப்பிட்டுகொண்டிருந்தவர்கள் சாப்பிடுவதை நிறுத்திகொண்டு, எரியும் மேசையிலிருந்து சற்று விலகிகொண்டனர்.
இறுதியாக தீயணைப்பானைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று உணவகம் தெரிவித்தது. வாடிக்கையாளர்களுக்கு அடுப்பை முறையாக பயன்படுத்த தெரியாததால் தீ மூண்டதாகக் கூறப்பட்டது.
மூக்காட்டா உணவு வகை சிங்கப்பூரர்களிடையே மிகப் பிரபலம்.மேசை மீதுள்ள ஒரு சிறு அடுப்பில் சட்டி ஒன்று வைக்கப்பட்டு, அதில் சூப் வகை ஊற்றப்படும். கொதித்துக்கொண்டிருக்கும் சூப்பில் இறைச்சி, காய்கறி வகைகளைப் போட்டு வாடிக்கையாளர்கள் சமைத்துச் சாப்பிடுவாரக்ள். சூடான 'கிரில்' அடுப்பில் இறைச்சித் துண்டுகளை வாட்டியும் உண்ணலாம்.

