நீக்குப்போக்கான வேலை நேரம் முக்கியம்: சிங்கப்பூர் ஊழியர்கள்

நீக்குப்போக்கான வேலை நேரம் முக்கியம்: சிங்கப்பூர் ஊழியர்கள்

1 mins read
634fb5b4-66b5-4309-994b-b018587d47fa
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நீக்குப்போக்கான வேலை நேரம் முக்கியம் என்று ஓர் ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலான சிங்கப்பூர் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வில் பங்கெடுத்த ஆயிரம் பேரில், 80 விழுக்காட்டினர் அவ்வாறு கூறினர். தாங்கள் விரும்பிய நேரத்தில் வேலை செய்ய அனுமதி இல்லையென்றால், அந்த பணிக்கு செல்லமாட்டார்கள் என்று 41 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

இதோடு, வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இல்லையென்றால், அந்த வேலையை ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்று ஆய்வில் கலந்துகொண்ட ஐந்தில் இருவர் கூறினர்.

மனிதவள நிறுவனமான ரன்ஸாட் நடத்திய ஆய்வில் 18 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நீக்குப்போக்கான வேலை நேரம் இல்லாதது, பணியிடம் அமைந்துள்ள வட்டாரம் ஆகிய காரணங்களால் கிட்டத்தட்ட 27 விழுக்காட்டினர் வேலையைவிட்டு விலகியதாகக் குறிப்பிட்டனர்.

ஆய்வில் கலந்துகொண்ட 52 விழுக்காட்டினர் மட்டுமே தாங்கள் வீட்டிலிருந்து வேலைசெய்ய அனுமதி உண்டு என்று கூறினர். 60 விழுக்காட்டினர் தங்களுக்கு நீக்குப்போக்கான வேலைநேரம் இருப்பதாக தெரிவித்தனர்.

சிங்கப்பூர் ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் முக்கியமாக இருக்கின்றன. ஆனால் பல நிறுவனங்கள் அந்த வசதியை அளிப்பதில்லை என்று ரன்ஸாட் நிறுவனத்தின் சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றுக்கான தலைமை நிர்வாகி குமாரி ஜெயா தாஸ் கருத்துரைத்தார். ஊழியர்களைத் தக்கவைத்துகொள்ள வேண்டும் என்றால் நிறுவனங்கள் நீக்குப்போக்கான வேலை வசதிகளை வழங்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.