$32மி. மோசடி செய்த தம்பதி கைது பற்றி அமைச்சர் சண்முகம்
வட்டார நாடுகளின் காவல்துறைகளுக்கு இடையே நல்லுறவு நிலவுவதாகவும் உதவி தேவைப்படும் சூழலில் அவை மிகச் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்குவதாகவும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
அண்மையில் 32 மில்லியன் வெள்ளி மதிப்புமிக்க ஆடம்பரப் பொருள் விற்பனை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தம்பதி மீதான வழக்கு குறித்து அமைச்சர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
பி ஜியாபெங் எனும் 26 வயது ஆடவரும் தாய்லாந்தைச் சேர்ந்த அவரது காதலி பன்சுக் சிரிவிபாவும் சென்ற மாதம் 4ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து தப்பிச் சென்றனர். ஆனால் மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட அவர்கள் இம்மாதம் 11ஆம் தேதி சிங்கப்பூரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது. சிங்கப்பூர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர்க் காவல்துறை இந்த வட்டாரக் காவல்துறைகளுடன் மிகச் சிறந்த வகையில் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி அவற்றுடன் அணுக்கமாகப் பணியாற்றுவதாகவும் அவர் கூறினார்.
குற்றம் செய்தால் பிடிபடும் வாய்ப்பு அதிகம், கைதுசெய்யப்பட்டால் செய்த தவறுகள் கண்டறியப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படும், அதையடுத்து தண்டனை விதிக்கப்படும் என்ற மூன்று அம்சங்களைத் தாம் அடிக்கடி வலியுறுத்தி வருவதை அமைச்சர் நினைவுபடுத்தினார்.
வழக்கில் தொடர்புடைய தம்பதி மீது, ஏமாற்றியது தொடர்பில் தலா இரண்டு குற்றச்சாட்டுகளும் சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டு வெளியேறியதாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரை விட்டு வெளியேறியது தவறு என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பி, தங்களுக்கு அதிக நெருக்குதல் இருந்ததாகவும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
இருவரையும் ஒரு வாரம் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இம்மாதம் 19ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். ஏமாற்றுக் குற்றம் ஒவ்வொன்றுக்கும் பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம். சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.

