74 வயது மூதாட்டியின் மகன் $800,000 இழப்பீடு கேட்கிறார்
மாரடைப்பு ஏற்பட்டு டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 74 வயது மூதாட்டி மூன்று வாரங்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.
அவரது மகன் தற்போது $800,000 இழப்பீடு கேட்டு மருத்துவமனை மற்றும் மூன்று மருத்துவர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
மூதாட்டி டான் யாவ் லானுக்கு நீரிழிவு, உயர் ரத்தம் அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன.
2018 ஏப்ரல் 23ஆம் தேதி பயிற்சி தாதியரின் உதவியுடன் அவர் குளித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூளை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அதே ஆண்டில் மூன்று வாரங்களுக்குப் பிறகு மே 13ஆம் தேதி அவர் மரண மடைந்தார்.
தேசிய நூலக வாரியத்தில் பணியாற்றும் பொதுச்சேவை ஊழியரான அவரது மகன் சியா சூ கியாங், 47, 2019ல் மருத்துவமனை மீதும் கவனக்குறைவாக இருந்ததாக மூன்று மருத்துவர்கள் மீதும் வழக்குத் தொடுத்தார். பராமரிப்புக் கடமைகள் பலமுறை மீறப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
மூதாட்டி டானுக்கு ஏற்கெனவே இருந்த இதய நோய், நீரிழிவு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட மருந்துகளை நிறுத்திவைத்தல், மருத்துவப் பயிற்சி பெறாத நபரை அவரைக் கையாள அனுமதித்தது உள்ளிட்ட வற்றை கடமையிலிருந்து மீறப்பட்ட அம்சங்களாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மருத்துவ நிபுணர்கள் உட்பட 30 பேர் இதில் சாட்சியம் அளிக்கவிருக்கின்றனர். அவர்களில் மூன்று பேர் திரு சியாவுக்கும் 24 பேர் மருத்துவமனை மற்றும் மூன்று மருத்துவர்களுக்காகவும் முன்னி லையாகின்றனர்.
திரு சியாவின் வழக்கறிஞரான திரு கிளாரென்ஸ் லுன் தமது தொடக்கவுரையில் நோயாளியின் மருத்துவப் பின்னணியை அறிந்திருந்தும் அதிகம் ஆபத்துள்ள, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நோயாளியைக் கவனிக்க பயிற்சித் தாதியரை அனுப்பி இரக்கமற்ற வகையில் பிரதிவாதிகள் (மருத்துவமனை, மூன்று மருத்துவர்கள்) நடந்து கொண்டனர் என்றும் இதன் விளைவாக அவர் நிலைகுலைந்து அவசர சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றும் வாதிட்டார்.
டான் டோக் செங் மருத்துவ மனையையும் டாக்டர் துரை ராஜ் டி. அப்பாதுரை, டாக்டர் லீ வெய் ஷெங், டாக்டர் ரஞ்சனா ஆச்சார்யா ஆகிய மூன்று மருத்துவர்களையும் வழக்கறிஞர் திருவாட்டி மார் சியோவ் ஹிவெய் பிரதிநிதிக்கிறார்.
நோயாளியை எல்லா அம்சங் களிலும் சிறந்த வகையில் நிர்வகித்து பொருத்தமான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தரமான பராமரிப்புக் கவனிப்பு வழங்கப்பட்டதாகவும் மருத்துவமனை, மூன்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2018 ஏப்ரல் 20ஆம் தேதி காய்ச்சல், உடல் அசதி காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மூதாட்டி டான் சென்றார்.
ஆரம்பத்தில் கடுமையான தொற்று, மாரடைப்பு, நீரிழிவு, ரத்த சோகை, மோசமடைந்த சிறுநீரகச் செயல்பாடு ஆகியவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பக்கட்ட சிகிச்சையாக ஆஸ்பிரின் மாத்திரை மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்த மாத்திரைகளை நிறுத்தி, நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அடுத்த நாள் டாக்டர் லீ நோயாளியை மருத்துவமனையில் உள்ள இதய நோய் சிகிச்சைப் பிரிவுக்கு பரிந்துரைத்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள வழக்கமான இன்சுலின் மருந்துக்குப் பதிலாக ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவுக்கு ஏற்ற இன்சுலின் மருந்தை வழங்கச் சொன்னார்.
இதய நோய் பிரிவுக்கு நோயாளியை மாற்றும் பரிந்துரையை பின்னர் டாக்டர் ரஞ்சனா ரத்து செய் தார்.
கடுமையான தொற்று மற்றும் ஹிமோகுளோபின் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி டானுக்கு ரத்தக் கசிவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்பிரின் மாத்திரையை தற்காலிகமாக நிறுத்துவது என்பது பொருத்தமான சிகிச்சை என்று பிரதிவாதிகள் சுட்டிக்காட்டினர்.
மூதாட்டி டானின் மாரடைப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் தேவைப்படவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள தீவிரத்தொற்றே அடிப் படைக் காரணமாகும்.
அவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் எந்தவித தாமதமும் ஏற்படவில்லை. பயிற்சித் தாதி உதவிக்கு அழைத்ததும் மருத்துவக் குழு வினர் உடனடியாக நோயாளியைக் கவனித்தனர் என்று பிரதிவாதிகள் கூறினர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

