சட்டப்பிரிவு 377ஏ தொடர்பான விவகாரம் சமூக அக்கறைக்கு உரியது: லாரன்ஸ் வோங்

சட்டப்பிரிவு 377ஏ தொடர்பான விவகாரம் சமூக அக்கறைக்கு உரியது: லாரன்ஸ் வோங்

2 mins read
a0ea90ba-d136-4ab3-99cc-0fb5c27d478e
-

ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­ற­மென வகைப்­ப­டுத்­தும் சட்­டப் பிரிவு 377ஏ தொடர்பான விவகாரம் பரந்த சமூக அக்­க­றைக்கு உரி­யது என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து உள்­ளார்.

சட்­டம் தொடர்­பா­க­வும் ஓரி­னப் பாலு­றவு நடத்­தையை குற்­ற­மாக்­கு­வது தொடர்­பா­க­வும் பல்­வேறு கருத்­து­கள் எழுந்­துள்ள நிலை­யில், 377ஏ சட்­டப் பிரிவை ரத்து செய்­வது, குடும்­பம், திரு­ம­ணம் என்­ப­ன­வற்­றைச் சுற்றி உரு­வான சமூ­கத்­தின் நற்­பண்­பு­க­ளைத் திசை­தி­ருப்­பி­வி­டுமோ என்­பதே பெரும்­பா­லான மக்­க­ளின் அக்­க­றை­யாக உள்­ளது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த விவ­கா­ரத்­தில், முன்­னோக்­கிய பாதை­யில் பிரி­வி­னை­யைப் பெரி­தாக்­கா­மல் ஒரு­மித்த கருத்தை எட்ட பல்­வேறு குழுக்­க­ளை­யும் ஈடு­ப­டுத்த வேண்­டும் என்ற சிங்­கப்­பூ­ரின் நடை­முறை பரி­சீ­ல­னை­யில் உள்­ளது என்­றார் திரு வோங்.

ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­ற­மென வகைப்­ப­டுத்­தும் 377ஏ சட்­டப் பிரிவு எப்­போது நீக்­கப்­படும் என்று புளூம்­பெர்க் செய்தி நிறு­வ­னத்­தின் தலைமை செய்தி ஆசி­ரி­யர் ஜான் மிக்கல்த்வெய்ட் கேட்­ட­தற்கு துணைப் பிர­த­மர் வோங் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­தார்.

திரு வோங்கை, 'நவீன மனி­தர்' என்­றும் ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்ற பரந்­த­ம­னம் கொண்­ட­வர் என்­றும் வர்­ணித்த திரு மிக்கல்த்வெய்ட், "சிங்­கப்­பூருக்கு மக்­களை வர­வ­ழைக்க முய­லும்­போது இது­போன்ற சட்­டப்­பி­ரி­வைக் கொண்­டி­ருப்­பது பெரிய தர்­ம­சங்­க­டத்தை உரு­வாக்­கு­வ­தாக இருக்­கும்," என்­றார்.

அதற்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங், "சட்­டங்­கள் பிரிட்­டிஷ் கால­னித்­துவ காலம்­தொட்டு இருந்து வரு­பவை என்­பது நன்கு புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­யது.

"ஒரு காலத்­தில் பிரிட்­டிஷ் கால­னி­க­ளாக இருந்த பல ஆசிய நாடு­கள் இதனை காலப்­போக்­கில் ரத்து செய்­தி­ருப்­பதை அர­சாங்­கம் தெரிந்­து­வைத்­துள்­ளது,

"ஆயி­னும், சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு தரப்­பி­னர் இந்த விவ­கா­ரம் வெறும் சட்­டம் தொடர்­பா­னது மட்­டு­மல்ல என்­றும் சமூ­கம், அதன் நற்­பண்­பு­கள், திரு­ம­ணம், குடும்­பம் ஆகி­யன சம்­பந்­தப்­பட்­டது என்­றும் தெரி­விக்­கின்­ற­னர்," என்­றார்.

ஓரின பாலு­ற­வுக்­காக ஆண்­

க­ளைத் தண்­டிக்க சட்­டப்­பி­ரிவு 377ஏ பயன்­ப­டுத்­தப்­ப­டக் கூடாது என்­ப­தற்கு ஆத­ர­வாக சிங்­கப்­பூர் உச்ச நீதி­மன்­றம் கடந்த பிப்­ர­வரி மாதம் தீர்ப்­ப­ளித்து இருந்­தது.

இம்­மா­தத் தொடக்­கப் பகு­தி­யில் சிங்­கப்­பூ­ருக்கு வந்த அமெ­ரிக்க மக்­க­ளவை நாய­கர் நேன்சி பெலோசி, இந்த விவ­கா­ரம் குறித்­துப் பேசி­யதை திரு வோங்­கு­ட­னான நேர்­கா­ண­லின்­போது திரு மிக்கல்த்வெய்ட் நினை­வூட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 'எல்­ஜி­பி­டிக்யூ' சமூ­கத்தை ஆத­ரிக்­கு­மாறு வர்த்­த­கக் குழுக்­களை அப்போது அவர் கேட்­டுக்கொண்­டார்.

இருப்­பி­னும், சட்­டப்­பி­ரிவு 377ஏ நீக்­கப்­பட வேண்­டுமா என்­பது சிங்­கப்­பூ­ரும் சிங்­கப்­பூ­ரர்­களும் முடிவு செய்ய வேண்­டி­யது என்று குறிப்­பிட்ட துணைப் பிர­த­மர் வோங், இப்படித்தான் காலம் கால­மாக சிங்­கப்­பூர் வலி­யு­றுத்தி வந்­துள்­ளது என்றும் இப்போதும் அதே நிலைதான் என்றும் கூறினார்.