அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையில் பூசலை விரும்பவில்லை என்றபோதிலும் அவ்விரண்டு நாடுகளுக்கும் இடையிலான இறுக்கமான உறவுகளாலும் அவற்றின் அண்மைய முடிவுகளா லும் உலகுக்கு அதிக ஆபத்து நிகழக்கூடும் என்று துணைப்
பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
தைவான் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவற்றால் இரண்டு நாடுகளுக்கு இடையில் அதிகரித்துள்ள பதற்றங்கள் தைவான் நீரிணையிலோ தென்சீனக் கடலிலோ எளிதில் ஒரு விபத்து போன்ற தாக்கத்தை ஏற்படுத்தலாம் என புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் திரு வோங் குறிப்பிட்டார்.
"இரு நாடுகளும் அடுத்தடுத்து பல முடிவுகள் எடுத்துவருவதை நாம் கவனிக்கத் தொடங்கி இருக்கிறோம். இத்தகைய முடிவுகள் இந்த உலகம் மிக மிக ஆபத்தானதாக மாற வழிவகுக்கும். அதற்கான அறிகுறிகளை தைவான் நீரிணையிலோ தென்சீனக் கடலிலோ நாம் கண்டிருக்கக்கூடும்," என்றார் அவர்.
இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க மக்களவை நாயகர் நேன்சி பெலோசி மேற்கொண்ட தைவான் பயணம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக எழுந்துள்ள அமெரிக்க-சீன பதற்றங்கள் பற்றி புளூம்பெர்க்கின் தலைமை செய்தி ஆசிரியர் ஜான் மிக்கல்த்வெய்ட் திரு வோங்கிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்னரும் இதைப்போன்ற சூழல் ஏற்பட்டதை திரு வோங் நினைவூட்டினார்.
"2001ஆம் ஆண்டு அமெரிக்க-சீன உறவுகள் நல்ல நிலையில் இருந்தபோது அமெரிக்க உளவு விமானம் ஒன்று சீன விமானம் ஒன்றுடன் மோதிய பின்னர் சீனாவின் ஹைனான் தீவில் அவசரமாகத் தரை இறங்கியது.
"இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் 24 விமானப் பணியாளர்களை சீனா பிடித்து வைத்திருந்தது. அமெரிக்கா வருத்தம் தெரிவித்த பின்னர் அவர்களை சீனா விடுவித்தது.
"இதுபோன்ற ஒரு சம்பவம் இப்போது நடக்குமானால் விளைவுகள் தீர்க்க முடியாத அளவுக்கு மோசமானதாக மாறக்கூடும்," என்று துணைப் பிரதமர் வோங் விளக்கினார்.
அத்துடன், இரு நாடுகளின் தலைமைத்துவமும் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பாக ஆக உயர்ந்த மட்டத்தில் அது நிகழலாம் என்றும் சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

