சிங்கப்பூர்-மலேசிய காவல்துறை அதிகாரிகள் இணைந்து எல்லை தாண்டிய இரண்டு மோசடிக் கும்பல்களை முறியடித்துள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், ஜோகூர், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருநாட்டுக் காவல்துறையிடம் மாட்டிக்கொண்ட கும்பல்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடுபட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. $1.3 மில்லியனுக்கும் அதிகமான இழப்புக்கு இந்த இரு கும்பல்களும் காரணம் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கும்பல்கள் விரித்த மோசடி வலையில் சிங்கப்பூரில் மட்டும் 60க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். மலேசியா, தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.
முதலீடு, வேலை, போலி சூதாட்டத் தளங்கள், பாலியல் சேவைகள், பாலியல் தொடர்பான மிரட்டல்கள், அரசாங்க அதிகாரிகளைப் போல பாசாங்கு செய்தல், கடன் முதலிய மோசடிகளில் சிக்கி பணம் இழந்ததாக சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் புகார் செய்திருந்தனர்.
கடந்த ஜூலை மாதத்திலிருந்து சிங்கப்பூரின் வர்த்தக விவகாரங்கள் துறையும் மலேசியாவின் வர்த்தகக் குற்ற புலனாய்வுத் துறையும் இணைந்து செயல்பட்டு மோசடிக் குற்றங்கள் தொடர்பான முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாக சிங்கப்பூர் காவல்துறை நேற்று தெரிவித்தது.
இம்மாதம் 10ஆம் தேதியன்று 19 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு பெண்களும் ஏழு ஆடவர்களும் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மலேசியர்கள்.
அதே நேரத்தில் 18 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு ஆடவர்களும் இரு பெண்களும் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டனர்.

