சிங்கப்பூரில் இணையம் மூலம் பொருள்கள் வாங்குவோருக்கு சமூக ஊடகங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக பேபால் 2022 எல்லையற்ற வர்த்தக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றில் உள்ள விளம்பரங்களைப் பார்த்த பிறகு வெளிநாடுகளில் விற்கப்படும் பொருள்களை வாங்கியதாக ஐந்தில் இருவர் கூறியதாக பேபால் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமூக ஊடகங்களில் உள்ள விளம்பரங்களைப் பார்த்து இணையம் மூலம் பொருள்களை வாங்கியதாக ஓராண்டுக்கு முன்பு ஐந்தில் ஒருவர் தெரிவித்தனர்.
இவ்வாண்டு நடத்தப்பட்ட ஆய்வை இப்சோஸ் உலகளாவிய ஆய்வு முகவை நடத்தியது.
ஆய்வில் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த பயனீட்டாளர்கள் பங்கெடுத்தனர்.
ஒவ்வொரு நாட்டிலும் 18 வயதுக்கும் மேற்பட்ட 1,000 பயனீட்டாளர்கள் ஆய்வில் பங்கெடுத்தனர். வெளிநாடுகளிலிருந்து இணையம் மூலம் பொருள்கள் வாங்குவதில் பிற நாட்டவர்களைக் காட்டிலும் சிங்கப்பூரர்கள் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வு தெரிவித்தது.

