ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட வீட்டில் நேற்று காலை மீண்டும் தீப்பிடித்தது.
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21, புளோக் 236ன் ஒன்பதாம் தளத்தில் அமைந்துள்ள அவ்வீட்டில் ஏற்பட்ட இரண்டாவது தீச்சம்பவம் குறித்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அந்நாலறை வீட்டின் படுக்கை அறை ஒன்றில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிதிலக் குவியல்களின் அடிப்பகுதியில் இருந்த தணலே அதற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
அதிகாலை 5 மணியளவில் புகை வாடையை உணர்ந்ததாகக் கூறினார் அக்குடியிருப்பின் 8ஆம் தளத்தில் வசிக்கும் திருவாட்டி லிம், 44.
"அதே வீட்டிலிருந்துதான் புகை வருவதாக நினைத்தோம். ஆனாலும், நேற்றுபோல் (நேற்று முன்தினம்) தீ மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும், நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறி, கீழே சென்றுவிட்டோம்," என்றார் அவர்.
நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் அவ்வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 48 வயது ஆடவர் ஒருவர் மாண்டுபோனார். அவ்வீட்டில் வசித்த இன்னொருவர், தீயணைப்புப் படையினர் வருமுன்னே அங்கிருந்து தப்பி வெளியேறினார்.

