இரவுக் கேளிக்கை நிலையங்களில் ஒழுங்குமுறைப் பாதுகாவலராக (பவுன்சர்) வேலைசெய்த ஒருவர், அங்கு காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினால் அல்லது அப்பகுதியில் காவல்துறை வாகனங்களைக் கண்டால், அதுபற்றி மற்ற கேளிக்கை விடுதிகளுக்குத் துப்பு தருவார். இதன்மூலம் காவல்துறையினர் வருமுன் அந்தக் கேளிக்கை நிலையங்கள் தங்களது முறையற்ற நடவடிக்கைகளை மறைத்துக் கொள்ள முடியும்.
இரண்டு வாட்ஸ்அப் குழுக்களின் உறுப்பினரான ஏரன் சுவா ஜுன் ஹாவ் என்ற அந்த 26 வயது ஆடவர், 2019 ஜனவரி - 2020 பிப்ரவரிக்கு இடையே இப்படி 60 துப்புத் தகவல்களை அனுப்பினார்.
முன்னதாக, 2019 ஜூலையில் ஏரன் தனது காரால் இன்னொருவர்மீது மும்முறை மோதிய குற்றச் சாட்டும் மெய்ப்பிக்கப்பட்டது. மொத்தத்தில் தன்மீதான எட்டுக் குற்றச்சாட்டுகளை ஏரன் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, சிங்கப்பூரரான ஏரனுக்கு நேற்று 17 வாரச் சிறைத் தண்டனையும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
மற்ற குற்றவியல் வழக்குகள் குறித்துப் புலனாய்வு செய்தபோது அவ்விரு வாட்ஸ்அப் குழுக்களைக் காவல்துறை கண்டுபிடித்தது.
'நைட் அவுல்', 'அங்கிள்வேலட்' என்ற அவ்விரு குழுக்களிலும் பெரும்பாலும் 'பவுன்சர்'களும் மற்ற இரவுக் கேளிக்கை நிலையங்களின் ஊழியர்களும் உறுப்பினர்களாக இருந்ததாகக் கூறப்பட்டது.
தாங்கள் கண்ட காவல்துறை வாகனங்களின் பதிவெண்கள், சோதனையிடங்கள், அமலாக்கக் குழுவில் எத்தனை பேர் உள்ளனர் உள்ளிட்ட விவரங்களை சங்கேதச் சொற்கள் மூலம் அக்குழு உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர்.
'நைட் அவுல்' குழுவின் உறுப்பினர்களாகச் சந்தேகிக்கப்படும் மேலும் எட்டுப் பேர் தங்களது குற்றங்களை நாளை ஒப்புக்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

