ஒவ்வொரு முறையும் $100,000 வரை முறைகேடு செய்வதற்கான சதித்திட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறி 'வயர்கார்டு ஏஷியா ஹோல்டிங் (டபிள்யூஏஎச்)' நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மூவர்மீதும் இன்னொரு நிறுவனத்தின் இயக்குநர்மீதும் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
சீ லீ வீ, 29, ஜேம்ஸ் ஏகா வர்தானா, 39, சாய் ஆய் லிம், 43, ஆகிய மூவர் வயர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள். நான்காமவரான 66 வயது ஹென்ரி இயோ சியூ ஹாய், 'ஜேக்கப்சன் ஃபார்ஈஸ்ட் மார்க்கெட்டிங் சர்விசஸ்' நிறுவனத்தின் இயக்குநர்.
அவர்கள் ஒவ்வொருவர்மீதும் இரண்டு முதல் ஒன்பது குற்றச்சாட்டுகள்வரை சுமத்தப்பட்டன. வர்தானா மட்டும் இந்தோனீசியர். மற்ற மூவரும் சிங்கப்பூரர்கள்.
ஜெர்மானியக் கட்டணச் செயலாக்க நிறுவனமான 'வயர்கார்டு ஏஜி'யின் துணை நிறுவனமாக 'டபிள்யூஏஎச்' சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறது.
அதன் முன்னாள் கட்டுப்பாட்டு, நிதித் துணைத் தலைவரான திரு எடோ கர்னியாவன் என்பவருடன் சேர்ந்து, அந்நால்வரும் 2018ஆம் ஆண்டில் சதிச் செயலில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே திரு கர்னியாவன் சிங்கப்பூரைவிட்டு வெளியேறிவிட்டார். அவர்மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் எந்நாட்டவர் என்ற விவரம் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
வயர்கார்டு வழக்குத் தொடர்பில் ஏற்கெனவே மூவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.
பிரிட்டிஷ்காரரான ஜேம்ஸ் ஹென்ரி ஓசல்லிவன், 47, 'சிட்டாடெல் கார்ப்பரேட் சர்விசஸ்' எனும் உள்ளூர் கணக்கியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.சண்முகரத்னம், 56, 'ஸ்ட்ரேட்டஜிக் கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் திலகரத்னம் ராஜரத்னம், 58, ஆகியோர் மீதான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

