சிங்கப்பூரின் நீர்த்தேவைகளை நிர்வகிக்கும் தேசிய அமைப்பான பொதுப் பயனீட்டுக் கழகம் பசுமைத் துறை சார்ந்த பங்குப் பத்திரங்களை வழங்கவுள்ளது. அவற்றைக் கொண்டு நீடித்த நிலைத்தன்மைக்கு உதவும் பசுமைத் திட்டங் களுக்கான செலவுகளைச் செய்ய கழகம் திட்டமிடுகிறது.
இந்தப் பங்குப் பத்திரங்களை விற்றுப் பெறும் தொகை இங்குள்ள நீர்நிலைகளில் மிதக்கும் சூரிய சக்தித் தகடுகளை வைத்து சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் திட்டங்கள் உள்ளிட்ட பசுமைத் திட்டங்களுக்குச் செலவு செய்யப்படும்.
இம்மாதப் பிற்பகுதியில் தனது முதல் பசுமை பங்குப் பத்திரங்களை வெளியிடவுள்ளதாக பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று தெரிவித்தது.
10 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள இடைக்கால பங்குப் பத்திரங்களை பன்னாட்டு நாணயங்களைக் கொண்டு வாங்க முடியும்.
சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவை அதிகரித்து வரும் நிலையில் நீர் விநியோகம் மீள்திறன் மிக்கதாக இருப்பதை உறுதி செய்யும் தன் முயற்சிகளுக்கு புதிய திட்டம் உதவும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் திட்டம் உதவும் என்றும் அது குறிப்பிட்டது.
சுற்றுப்புறத்துக்கு பயன்தரும் திட்டங்களுக்கான நிதியைத் திரட்ட பசுமைப் பங்குப் பத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை அல்லது முறைப்படுத்தப்பட்ட தொகை வழங்கப்படும்.
இவ்வேளையில் பொதுப் பயனீட்டுக் கழகம் பசுமை நிதிக் கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது. அது தற்போது வரைந்துள்ள திட்டங்களுக்கும் வருங்காலத்தில் வரையவுள்ள திட்டங்களுக்குமான நிதி அந்த கட்டமைப்பின்வழி பெறப்படும்.
சந்தையில் கடைப்பிடிக்கப்படும் சிறப்பான ஒழுங்குமுறைகள், பசுமைத் திட்டங்களுக்கான தகுதி மதிப்பீட்டு விதிமுறைகள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
நீடித்த நிலைத்தன்மை கொண்ட நீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி போன்றவற்றுக்கான திட்டங்கள் இந்த கட்டமைப்பின்வழி செயல்படுத்தப்படும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.

