சிறுமியை அடித்துத் துன்புறுத்திய பெண்கள்; காவல்துறை விசாரணை
பதின்ம வயதுச் சிறுமியை மூன்று பெண்கள் மூர்க்கத்தனமாக அடித்துத் துன்புறுத்துவதைக் காட்டும் காணொளி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை செங்காங் வட்டாரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவின.
அந்த மூவரும் அச்சிறுமியைக் குத்தி, அறைந்து, அவர் மீது செருப்புகளை வீசியதாக அறியப்படுகிறது. அப்போது தம்மைப் பாதுகாத்துக்கொள்ள அச்சிறுமி தமது முகத்தை மறைத்துக்கொண்டார்.
புளோக் 269 காம்பஸ்வேல் லிங்க் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்ததாகவும் அப்போது அவ்விடத்தில் இரண்டு பதின்ம வயது ஆண்கள் இருந்ததாகவும் ஆனால் அவர்கள் துன்புறுத்தலைத் தடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணி அளவில் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி காயமடைந்தார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் அவசியம் ஏற்படவில்லை. அவர் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டார்," என்று காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று அவர் தெரிவித்தார். தாக்குதல் சம்பவம் தொடர்பான மூன்று காணொளிகள் நேற்று முன்தினம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமி பிறரைப் பற்றி இழிவாகப் பேசி பிரச்சினைகளை விளைவித்ததாக அவரைத் தாக்கிய மூவரும் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
பாதசாரிக்கு மரணம் விளைவித்த சைக்கிளோட்டிக்குச் சிறை
விபத்துக்குக் காரணமாக இருந்து 73 வயது பாதசாரிக்கு மரணம் விளைவித்த சைக்கிளோட்டிக்கு 12 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கவனமின்மையால் மரணம் விளைவித்த குற்றச்சாட்டை 46 வயது டேனியல் வூன் ஹோக் சூன் ஒப்புக்கொண்டார்.
இந்த விபத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதியன்று காலை 7 மணி அளவில் ஹவ்காங் அவென்யூ 3க்கும் லோராங் ஆ சூவுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பு அருகில் நிகழ்ந்தது.
சாலையைக் கடந்துகொண்டிருந்த முதியவர் மீது வூன் வேகமாக ஓட்டிச் சென்ற சைக்கிள் மோதியது. இதில் அந்த முதியவருக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையை அவர் அடைந்தபோது அவரது உயிர் பிரிந்தது.

