தேசிய சேவையின் 55 ஆண்டு கால வரலாற்றைக் குறிக்கும் புதிய நடைபாதை
தேசிய சேவையின் வரலாறு, முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற உதவும் வகையில் புதிய நடைபாதை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
'செப்பாட் ஜாலான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடைபாதை 3.3 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
'செப்பாட் ஜாலான்' என்பது மலாய் மொழியில் சொல்லப்படும் பயிற்சிக் கட்டளை. இதற்கு விரைவாக அணிவகுத்து நடக்க வேண்டும் என்று பொருள்.
தேசிய சேவையின் 55ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட 'செப்பாட் ஜாலான்' நடைபாதையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏழு இடங்கள் அமைந்துள்ளன.
ஃபோர்ட் கேனிங்கில் உள்ள பேட்டில் பாக்ஸ் பதுங்குகுழி, மத்திய தீயணைப்பு நிலையம், எஸ்பிளனேட் அரங்கம், போரில் மாண்ட பொதுமக்களுக்கான நினைவிடம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், மரினா பே மிதக்கும் மேடை, கிளமென்சியூ அவென்யூ ஆகியவை அவை.
இந்த நடைபாதையில் செல்லும் பார்வையாளர்கள் திறன்பேசிகளைப் பயன்படுத்தி, 'கோ.கவ்.எஸ்ஜி/என்எஸ்55 டிரெய்ல்' இணையத்தளத்தின் வழியாக மிகைமெய்த் தொழில்நுட்ப அம்சங்களைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக, போர் நினைவிடத்தில், இரண்டாம் உலகப் போரின்போது உயிர்நீத்த பொதுமக்களுக்கு ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்துவது போன்ற மிகைமெய் உயிரோவியக் காட்சியைக் காணலாம்.
கிளமென்சியூ அவென்யூவில் 1954ஆம் ஆண்டு கட்டாய தேசிய சேவையை எதிர்த்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் புகைப்படங்களைக் காணலாம்.
முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் விநாடி வினா அங்கத்தை நிறைவுசெய்தால் புதிர்ப்போட்டிக்கான ஒரு பகுதி தரப்படும். ஏழு பகுதிகளையும் சேகரித்தால் 'என்எஸ்55 வாட்ஸ்அப் ஸ்டிக்கர்', மின்னிலக்க அட்டை ஆகியவற்றைப் பெறலாம்.
சிங்கப்பூரர்களை கேளிக்கையான முறையில் ஈடுபடுத்தி தேசிய சேவையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது இந்த நடைபாதை அமைக்கப்பட்டதன் நோக்கம் என்று தேசிய சேவை விவகாரத் துறையின் தலைவர் கர்னல் லிம் ஹான் யோங் கூறினார்.
கூடுதலானோர் பங்கேற்க உதவும் வகையில் நகரின் மத்திய பகுதியில் இதை அமைத்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும் அதிகமானோரை ஊக்குவிக்கும் நோக்கில் மெய்நிகர் முறையில் இதில் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
மெய்நிகர் முறையிலான நடைபாதையில் கூடுதலாக ஐந்து அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நேரடியாக நடக்கும்போது பார்க்கக்கூடிய மிகைமெய் அம்சங்கள் அனைத்தும் இதிலும் இடம்பெற்றுள்ளன.
'செப்பாட் ஜாலான்' நடைபாதையின் இந்த அம்சங்கள் அடுத்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை இடம்பெறும். மிகைமெய் அம்சங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே விவரங்களைப் பெற முடியும்.

