கேரோசல் இணைய விற்பனைத் தளத்தில் மீண்டும் மோசடி நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மோசடிக்காரர்கள் இவர்களிடம் கிட்டத்தட்ட 17,000 வெள்ளியைச் சுருட்டியதாகத் தெரியவந்துள்ளது.
மோசடிக்காரர்கள் முதலில் இந்த மின்வர்த்தகத் தளத்தில் விற்பனைக்கு என்று குறிப்பிடப்பட்ட பொருளை வாங்க விரும்புவதாக அணுகுவர். பின்னர் 'ஃபெட்எக்ஸ்' அல்லது 'சிங்போஸ்ட்' மூலம் பொருளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறுவர்.
இவ்வாறு கட்டணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இணையத் தொடர்பு முகவரியை அனுப்பி அதில் வங்கி விவரங்களைப் பதியும்படி சொல்லுவர்.
இத்தகைய இணைய முகவரிகள் பாதிக்கப்பட்டவரை மோசடி இணையத் தளத்திற்கு இட்டுச்சென்று மறைச்சொல் போன்ற முக்கிய விவரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்.
பாதிக்கப்பட்டவர் வங்கிக் கணக்கில் தனது அனுமதியின்றி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதை அறிந்த பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்வார்.
இத்தகைய மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை நினைவுறுத்தியது.
இணையத்தில் அறிமுகமாவோரின் விவரங்களைக் கவனத்துடன் சரிபார்க்கும்படியும் தெரியாதவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.
ஏமாற்றப்பட்டதாகத் தெரியவந்தால் உடனடியாக வங்கிக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய மோசடிக் குற்றங்கள் குறித்த விவரமறிந்தோர் காவல்துறையின் 24 மணி நேரத் தொலைபேசிச் சேவையை 1800-255-0000 என்ற எண்ணில் அழைத்து விவரங்களைக் கூறலாம். அல்லது இணையத்திலும் இந்த விவரங்களைப் பதிவு செய்யலாம்.
அவசர உதவி ஏதும் தேவைப்பட்டால் 999 என்ற எண்ணில் காவல்துறையை நாடலாம்.

