அல்ஜுனிட் வட்டார வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் நேற்றுக் காலை தீ மூண்டதையடுத்து 13 பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.
புளோக் 3, அப்பர் அல்ஜுனிட் லேனில் உள்ள ஆறாவது மாடி வீட்டில், வரவேற்பறையில் எரிந்துகொண்டிருந்த மெழுகுவத்தியினால் தீ மூண்டிருக்கலாம் என்று கருதப்படுவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
நேற்றுக் காலை 7:05 மணியளவில் இதுகுறித்துத் தகவல் கிடைத்ததாக அது கூறியது. பின்னர் தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வரவேற்பறையில் மூண்ட தீயை அணைத்தனர்.
தீயணைப்பாளர்கள் செல்லும் முன்னரே மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து வெளியேறினர். குடிமைத் தற்காப்புப் படை மேலும் 10 பேரை வெளியேற்றியது. இவர்களில் 90 வயதான மூதாட்டியும் ஒருவர்.
தீ மூண்ட வீட்டில் 75 வயதாகும் திருவாட்டி தியோ போங் சீ தனியாக வசித்துவருகிறார்.
காலை உடற்பயிற்சிக்குப் பிறகு மெழுகுவத்தி ஏற்றி வழிபட்ட அவர் பின்னர் அருகில் இருக்கும் தங்கள் குடும்ப இல்லத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறினார்.
புகை நாற்றத்தைத் தொடர்ந்து அண்டை வீட்டினர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் அளித்தனர்.
பாதிக்கப்பட்ட வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு நகர மன்றத்தில் இருந்து நிதியுதவி தரப்படும் என்று போத்தோங் பாசிர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீத்தோ யி பின் கூறினார்.
நேற்று முற்பகல் 11:30 மணியளவில் வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

