இருப்பினும் உதவிநாடுவோர் எண்ணிக்கை குறைவு என்கிறது ஆய்வு
தங்களது குறைகளை யாராவது கேட்கமாட்டார்களா என்பதும் உணர்வுபூர்வ ஆதரவை நாடுவதும் சிங்கப்பூரில் உள்ள பராமரிப்பாளர்
களின் விருப்பங்களாக உள்ளன என்று 'மோண்ட்ஃபோர்ட் கேர்' என்னும் சமூக சேவை அமைப்பின் மூத்தோர் பராமரிப்பு சேவை நிலைய இயக்குநர் திருமதி வாங் யு சுவான் தெரிவித்து உள்ளார்.
அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த சமூக சேவை அமைப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நேரடித் தொலைபேசிச் சேவைக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.
ராடின் மாஸ் பகுதியில் உள்ள 'கேர்கிவர் கம்யூனிட்டி லேப்'பின் சேவைகளில் ஒரு பகுதியாக நேரடி தொலைபேசிச் சேவை தொடங்கப்பட்டது. பராமரிப்பாளர்கள் தங்களது மனக்குறையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் விதமாகவும் தங்களது அன்புக்குரியவர்களைப் பராமரிப்பதில் உள்ள பிரச்சினைகளைப் பேசி அதற்குத் தீர்வுகாணவும் இச்சேவை உதவுகிறது.
தேசிய சமூக சேவை மன்றம் தனது சமூகப் பங்காளிகளுடன் இணைந்து தொடங்கிய பல்வேறு முன்னோடி பராமரிப்பாளர் திட்டங்களில் ஒன்று இம்முயற்சி.
'கேர்கிவர் கம்யூனிட்டி லேப்' அமைப்பு அக்கம்பக்கக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பராமரிப்பாளர்களுக்கான ஆதரவை அதிகரித்து வருகிறது.
தங்களது அன்புக்குரியவர்களைப் பராமரிப்பதில் உதவி பெற்றதன் மூலம் சிறந்த வாழ்க்கைத் தரம் பெற்றதாக ஆய்வு ஒன்றில் பராமரிப்பாளர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அதனைக் கட்டிக்காக்கும் பொருட்டு அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய சமூக சேவை மன்றம் தொடங்கிய ஆய்வின் முடிவுகள் இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. உதவி கிடைப்பதால் தங்களது வாழ்க்கைத்தரம் நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கக்கூடிய அம்சங்களைக் கண்டறிந்து அவர்களின் தேவைகளைக் கவனிப்பதை நோக்கமாகக் கொண்டது அந்த ஆய்வு.
உடற்குறையுள்ள, நாள்பட்ட நோய்களையுடைய அல்லது மன
நலம் குன்றியவர்களைப் பராமரித்து வருவோரிடம் கலந்துபேசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் 21 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய 4,500க்கும் அதிகமான சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் பங்கேற்றனர்.
பராமரிப்பாளர்களின் வாழ்க்கைத்தரம் தொடர்பான விரிவான முறையில் ஆய்வு நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்று தேசிய சமூக சேவை மன்றம் கூறியது.
பராமரிப்பாளர்களின் பணிக்குக் கூடுதல் உதவி வழங்கப்பட்டாலும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள குறைவானவர்களே முன்வருவதாகவும் சேவைப் பற்றாக்குறை போன்றவற்றை அவர்கள் அதற்குக் காரணங்களாகக் குறிப்பிடுவதும் ஆய்வு மூலம் தெரியவந்தது.

