சிங்போஸ்ட் லாபம் சுருங்கியது
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 'சிங்போஸ்ட்' டின்
நடைமுறை லாபம் $10.6 மில்லியனுக்கு சுருங்கியது. இது 46.7 விழுக்காட்டு வீழ்ச்சி. முதல் காலாண்டில் வருவாய்
34.7 விழுக்காடு அதிகரித்து $475.2 மில்லியனைத் தொட்டபோதிலும் கடுமையான செலவுகளும் அஞ்சல் மற்றும் பொட்டல வர்த்தகத்தில் நிலவிய சவால்களும் லாபத்தைக் குறைத்துவிட்டன. முதலாம் காலாண்டில், சிங்கப்பூரில் கடிதப் போக்குவரத்து 8 விழுக்காடு குறைந்துவிட்டது. அதேபோல இணைய வர்த்தகமும்
26.1 விழுக்காடு சுருங்கியது. மேலும், அனைத்துலக அஞ்சல் மற்றும் பொட்டல வர்த்தகத்திலும் 32.5% வீழ்ச்சி பதிவானது. குறிப்பாக, 'சிங்போஸ்ட்'டின் பெரும்பாலான அனைத்துலக இணைய வர்த்தகம் சீனாவிலிருந்து செய்யப்படுவதால் அங்கு அறிவிக்கப்பட்ட கொவிட்-19 தொற்று முடக்கநிலை, இந்த வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக சிங்போஸ்ட் நேற்று தெரிவித்தது.
சூதாட்டம்: 4 சகோதரர்களில் மூவருக்குத் தண்டனை
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றில் மூன்று தலைவர்களில் ஒருவருக்கு நேற்று முன்தினம் 4½ ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சீட் சியன் தியன், 74, எனப்படும் அந்த முதிவயருக்கு $141,000 அபராதமும் விதிக்கப்பட்டது. திட்டமிட்டு குற்றமிழைத்தல் தொடர்பான சட்டத்தின்கீழான இரு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை கள் அறிவிக்கப்பட்டன. அபராதத்தைச் செலுத்தத் தவறி னால் அவர் 71 நாள்கள் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டியிருக்கும். குற்றக் கும்பல் தலைவர்கள் மூவரும் சகோதரர்கள். மார்ச் மாதம் இவரது சகோதரர் சீட் சியோ பூன், 57, என்பவருக்கு எட்டு மாதம், இரண்டு வாரம் சிறைத் தண்டனையும் $620,000 அபராதமும் விதிக்கப்பட் டன. மூன்றாவது சகோதரரான சீட் சியாவ் ஹுவாட், 67, தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த மூவருடன் நான்காவது சகோதரரும் உள்ளார். ஆயி னும் குற்றக்கும்பல் தலைவராக அவர் இல்லை. இவர்களின் குற்றங்களோடு சம்பந்தமில்லாத சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்காக சீட் சியாவ் குவாங், 73, எனப்படும் அவர் கடந்த ஏப்ரல் மாதம் தண்டிக்கப்பட்டார். 4 ஆண்டு சிறைத் தண்டனையும் $30,000 அபராதமும் அப்போது அவருக்கு விதிக்கப்பட்டன.

