கல்வி அமைச்சு: அச்சத்தை ஏற்படுத்தும் துன்புறுத்தல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது, பள்ளிகளில் அவற்றுக்கு இடமில்லை

கல்வி அமைச்சு: அச்சத்தை ஏற்படுத்தும் துன்புறுத்தல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது, பள்ளிகளில் அவற்றுக்கு இடமில்லை

1 mins read
c785353c-a38f-400f-a10b-c1a7ac8749ba
அண்மையில் செங்காங்கில் மூன்று பெண்கள் வேறொரு பெண்ணைத் தாக்கிய சம்பவம் பதிவான காணொளியிலிருந்து ஒரு காட்சி. படம்: எஸ்ஜிஃபாலோஸ்ஆல் / இன்ஸ்டகிராம் -

'புலியிங்' எனப்படும் தொந்தரவு தந்து அச்சத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் பள்ளிகளில் அவற்றுக்கு இடமில்லை என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

செங்காங்கில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் மூன்று பெண்கள் வேறொரு பெண்ணைத் தாக்கிய காட்சி பதிவான காணொளி ஒன்று இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து கல்வி அமைச்சு வெள்ளிக்கிழமை (19 ஆகஸ்ட்) இரவு அவ்வாறு கூறியது.

தாக்கிய மூன்று பெண்களுக்கும் வயது 15.

கைதுசெய்யப்பட்ட அவர்களின் மீது வேண்டுமென்றே ஒருவரைக் காயப்படுத்தியதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தகவல் வந்தால் அவற்றின் பின்னணியில் இருக்கும் காரணங்களை அறிய பள்ளி ஊழியர்கள் முற்படுவர் என்று கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் சிக்கலானவையாக இருக்கலாம் என்பதே அதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார்.

"இத்தகைய நடவடிக்கைகள் இணையம் வாயிலாகவும் இடம்பெறலாம். பொதுவாக அவை மனிதர்களுக்கிடையிலான உறவுகளில் தீர்வு காணப்படாத விவகாரங்கள் தொடர்புடையவையாக இருக்கும்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

"சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பிறரைக் காயப்படுத்தும் வகையிலோ சமூக நலனுக்குப் புறம்பான செயலில் ஈடுபட்டாலோ பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டும் என்பதை மாணவர்களுக்குப் புரியவைக்கவும் தேவைப்படும்போது தகுந்த கண்டிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன," என்று அவர் கூறினார்.