ஜாலான் புசாரில் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கான சந்தை சனிக்கிழமையன்று (20 ஆகஸ்ட்) அமைக்கப்பட்டுள்ளது.
ஜாலான் புசார் குழுத்தொகுதியில் உள்ள அரசாங்க வாடகை வீடுகளில் வசிக்கும் 400 குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளுடன் இச்சந்தைக்குச் சென்று மகிழ்ந்தனர்.
'கிவ் அண்ட் டேக் மெகாமார்ட்' எனும் ஒரு நாளுக்காக அமைக்கப்பட்டுள்ள இச்சந்தைக்கு ஜாலான் புசார் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளும் மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்தன.
வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவுவது இந்த முயற்சியின் நோக்கம்.
சந்தையில் ஆடைகள், உணவு உள்ளிட்டவையும் சிகை அலங்காரம், தசை பிடிப்பு போன்ற சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

