சிங்கப்பூரின் நகர்ப்புற இடங்களை மேம்படுத்தியதற்கும் கடலோர, உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களில் ஆற்றிய தொண்டுகளுக்காகவும் இரண்டு பொறியாளர்கள் அங்கீகரித்துப் பாராட்டப்பட்டுள்ளனர்.
நிலம் மீட்பில் பல முயற்சிகளை எடுத்து உதவியதற்காக திரு ஜேம்ஸ் லாம் என்ற பொறியாளருக்குக் கட்டுமான, சுற்றுப்புற பொறியியல் பள்ளி தனிச்சிறப்பு முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கட்டட, கட்டுமான ஆணையத்தில் குழும இயக்குநராக (கட்டட மீள்திறன் பிரிவு) இருக்கும் திரு தனபால் காளியண்ணன், சிறப்பிக்கப்பட்ட மற்றொரு பொறியாளர்.
இவர், பலதரப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை வடிவமைப்பதில் ஈடுபட்டு தொண்டாற்றியவர்.
சிங்கப்பூர் ஆற்றுக்குக் குறுக்கே இருக்கும் ஜியாக் கிம் பாலம், ராபர்ட்சன் பாலம் ஆகியவை அத்தகைய உள்கட்டமைப்பு வசதிகளில் அடங்கும்.
நகர இடங்களை மேம்படுத்துவதில் அறிவியலும் பொறியியலும் மிக முக்கிய உயிர்நாடியான பங்கினை ஆற்றுவதாகத் திரு தனபால் தெரிவித்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமையன்று (20 ஆகஸ்ட்) பேராசிரியர் சென் சார்ங்க் நிங் தனிச்சிறப்புமிக்க விரிவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் இவ்விருவரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அந்நிகழ்ச்சியில் மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் கலந்துகொண்டு முக்கிய உரையாற்றினார்.
பல துறைகள் சேர்ந்து செயல்படுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி பேசிய திரு டியோ, உயிரியல் மருத்துவம், உயிரியல் பொறியியல் போன்ற துறைகள் சேர்ந்து செயல்படுவதும் புதிய புத்தாக்கங்களும் கொவிட்-19 தொற்று காலத்தின்போது மிகவும் பயன்மிக்கவையாக இருந்ததைச் சுட்டினார்.

