குடும்ப வன்முறையிலிருந்து மீண்டுவந்த தாய்க்கு விருது

குடும்ப வன்முறையிலிருந்து மீண்டுவந்த தாய்க்கு விருது

2 mins read
ee3aa1bb-1551-4103-8ab0-ca5dcad7935c
முன்மாதிரித் தாயார் விருதை வென்ற பாண்டித்துரை பரிமளா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

தனக்கு 20 வயதாகி சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்ட திருவாட்டி பாண்டித்துரை பரிமளா, சுமார் 17 ஆண்டுகள் குடும்ப வன்முறைக்கு ஆளானார்.

இவரது ஏழு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகள் வயிற்றில் இருந்த காலமும் அவற்றில் அடங்கும்.

அதனால் வயிற்றில் இருந்தபோது அந்த மூன்று பிள்ளைகளுக்கும் வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டது.

தற்போது திருவாட்டி பரிமளாவின் பிள்ளைகள் அனைவரும் 11லிருந்து 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.

2018ஆம் ஆண்டு இவரது கணவர் இவரையும் இவரது பிள்ளைகளில் இருவரையும் அடித்தது மட்டுமின்றி சமுராய் வாளால் தாக்கப்போவதாக மிரட்டினார்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து திருவாட்டி பரிமளா காவல்துறையிடம் புகார் கொடுத்தார்; கணவர் கைதுசெய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு தனது பிள்ளைகளுடன் வாழ இவர் ஓர் ஈரறை வீவக வீட்டை வாங்கினார்.

தற்போது கணவரை விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பெரும் துயரத்திலிருந்து மீண்டுவந்த திருவாட்டி பரிமளா தற்போது தொடக்கக் கல்லூரி ஒன்றில் செயல்பாட்டு ஆதரவு அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

இவ்வாண்டுக்கான 'இஎம்ஏ' எனும் முன்மாதிரித் தாயார் விருதை இவர் வென்றுள்ளார்.

வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்டு மீண்டு வருவோருக்கு இஸ்லாமிய லாபநோக்கில்லா அமைப்பான ஜாமியா சிங்கப்பூர் ஆண்டுதோறும் இவ்விருதை வழங்கி வருகிறது.

சனிக்கிழமையன்று (20 ஆகஸ்ட்) 'சுவிசோட்டல் தி ஸ்டேம்ஃபர்ட்' ஹோட்டலில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் திருவாட்டி பரிமளாவிற்கு 6,000 வெள்ளி ரொக்கத்தையும் கோப்பையையும் வழங்கி கௌரவித்தார்.

"வெல்வது முக்கியமல்ல, எனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். நான் மட்டுமல்ல. பலர் இன்னமும் துயரத்திலிருந்து வெளிவராமல் இருக்கின்றனர்," என்றார் திருவாட்டி பரிமளா.

ஜாமியா சிங்கப்பூரின் முன்மாதிரி இளம் தாயார் விருது 39 வயது திருவாட்டி ஷெரீன் அஸிஸ்-வில்லியம்ஸுக்கு வழங்கப்பட்டது.

40 வயதுக்குக்கீழ் உள்ள தாய்மாருக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இளம் தாய்மாரின் அயராத உழைப்பு, தொழில் முனைவர்களாவதில் அவர்களின் துடிப்பு, மனவுறுதி போன்ற அம்சங்களுக்கு அங்கீகாரம் தர இவ்விருது வழங்கப்படுகிறது.