முரசொலி
பாடாங் என அழைக்கப்படும் சிங்கப்பூரின் தேசிய திடல், சிங்கப்பூரின் 75வது தேசிய சின்னமாக இந்த ஆண்டு தேசிய தினத்தன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தின் மையத்தில் 4.3 ஹெக்டர் பரப்பளவில் ஆறு காற்பந்துத் திடல்கள் அளவில் அது அமைந்துள்ளது.
இங்குதான் இரு பிரபலமான விளையாட்டுச் சங்கங்களான சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப் மற்றும் சிங்கப்பூர் ரிக்கிரியேஷன் கிளப் ஆகிய இரண்டும் உள்ளன.
சிங்கப்பூரின் ஆக உயரிய அங்கீகாரமாக விளங்கும் தேசிய சின்னங்கள் பட்டியலில் முதல் முறையாக திறந்தவெளி பச்சைப் புல்தரையான பாடாங் திடல் இடம்பெற்றுள்ளது என்று தேசிய மரபுடைமை வாரியம் கூறியுள்ளது.
இந்த அங்கீகாரம் அதற்கு முற்றிலும் பொருத்தமானது என்பதில் சந்தேகமில்லை.
சிங்கப்பூர் வரலாற்றில், 1800களிலிருந்து தொடர் பயன்பாட்டில் இருந்துவரும் பாடாங் திடல், மேல்தட்டு மக்கள், சாதாரண மக்கள் என இரு பிரிவினரும் பயன்படுத்தும் இடமாக உள்ளது.
காலனித்துவ ஆட்சியின் மேல்நிலை மக்கள் விரும்பி விளையாடும் கிரிக்கெட்டுடன் சாதாரண மக்களை அதிகம் ஈர்க்கும் காற்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுகளையும் அது கண்டு வந்துள்ளது.
சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப்பும் சரி, சிங்கப்பூர் ரிக்கிரியேஷன் கிளப்பும் சரி, நாட்டு மக்களின் விளையாட்டு உணர்வுகளை இன்றுவரை போற்றி வந்துள்ளன. காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அரச குடும்ப பிறந்த நாள் விழாக்கள், வைபவங்கள், அரச குடும்ப முடிசூட்டு விழாக்கள் போன்ற அதிகாரபூர்வ கொண்டாட்டங்களுக்குப் பாடாங் திடல் ஒரு வசதியான இடமாக இருந்தது.
பின்னர், காலனித்துவ ஆட்சிக்குத் தொடர்பில்லாத சீனப் புத்தாண்டு, தைப்பூசம், நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாட்டங்களும் இங்கு இடம்பெறத் தொடங்கின. சிங்கப்பூர் சமுதாயத்துடன் ஒன்றிவிட்ட பாடாங் திடல், காலனித்துவ ஆட்சிக்கு பின்னரும் தனது மகத்துவத்தை இழக்கவில்லை.
இங்குதான், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தலைவர்களில் ஒருவரும் பல்லாயிரக்கணக்கான சிங்கப்பூர்-மலேசிய இந்தியர்கள் இடம்பெற்ற இந்திய தேசிய ராணுவத்தை (ஐஎன்ஏ) வழிநடத்தியவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது நாட்டின் சுதந்திரத்துக்காக வீரமுழக்கம் செய்தார்.
அது மட்டுமா, சிங்கப்பூரை ஆக்கிரமித்து இங்கு கொடுங்கோல் ஆட்சி புரிந்து நாட்டின் இருண்ட காலமாக விளங்கி பொதுமக்களுக்கு ஆற்றொணாத் துயரத்தைத் தந்த ஜப்பானிய ஆட்சிமுறை முடிவுக்கு வந்த வெற்றிப் பரவசத்தைக் கொண்டாடும் இடமாகவும் பாடாங் திடல் விளங்கியது.
பாடாங் திடலின் முக்கியவத்துவம் இத்துடன் நிற்கவில்லை. சிங்கப்பூர், மலேசியாவுடன் 1963ஆம் ஆண்டு இணைந்தபோது அந்த அறிவிப்பு நிகழ்ச்சியும் அங்கிருந்துதான் வந்தது.
சிங்கப்பூரின் முதல் தேசிய தின அணிவகுப்பு தொடங்கி, தொடக்ககால தேசிய தின பேருரை, இளையர் விழாக்கள் போன்ற இளையர்களைச் சிறப்பிக்கும் விழா நிகழ்வுகளும் பாடாங் திடலை மக்கள் மனதில் நீங்கா இடம்பெறச் செய்தன.
பல நாள் பயிற்சி, ஒத்திகை என்று ராணுவத்தின் பல பிரிவுகள் உள்பட, பள்ளி மாணவர், ஊழியர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு பாடாங் திடலைச் சுற்றி வருவதைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சி.
அதுவும் பயிற்சி, ஒத்திகை காலத்தில் வாடிய முகத்துடன் கலந்துகொண்டோர்கூட நகர மண்டபக் கட்டடத்தில் கூடியுள்ள பிரமுகர்கள், பொதுமக்களை வீரவணக்கத்துடன் தாண்டிச் செல்லும்போது தாங்கள் பட்ட சிரமத்தை மறந்து மகிழ்ச்சிக் கடலில் திளைத் ததைக் காண முடிந்தது.
கூடவே, பல்வேறு கலாசாரக் குழுக்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்த ஆர்வமாய் ஆடிப் பாடி, மக்கள் கரவொலிக்கு இடையே செல்வதும் பாடாங் திடலுக்கே உரித்தான ஒன்று.
இதேபோல் மாணவ மணிகள் 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் இளையர் விழா அணிவகுப்புக்குப் பாடாங் திடலில் விடியாற்காலை முதல் விழா ஆரம்பிக்கும்வரை சில மணிநேரம் காத்திருந்த சிரமத்தையும் மறந்து பார்வையாளர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு இடையே சென்ற நிகழ்வும் உண்டு.
சிங்கப்பூரின் தொடக்ககால தேசிய தினப் பேருரையும் பாடாங் திடலில்தான் நிகழ்ந்தது. காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, புதிதாக அமைந்த உள்நாட்டு அரசு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளது என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் அந்தப் பேருரையைக் கேட்க ஆவலுடன் காத்திருப்பர், பாடாங் திடலில் அமர்ந்தவாறே.
இவை அனைத்தும் கூடி பாடாங் திடல் சிங்கப்பூர் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
இவ்வளவு சிறப்புகளைத் தாங்கி நிற்கும் பாடாங் திடலைக் காலந்தோறும் நம் நினைவில் நிறுத்திக்கொள்வதோடு நில்லாமல் அதை வாழும் மரபுடைமை இடமாகவும் பாதுகாக்க வேண்டும்.
இதைச் செய்ய, பாடாங் திடலில் நடைபெறும் நிகழ்வுகளில் சாதாரண சிங்கப்பூரர்களும் அடிக்கடி வந்து கலந்துகொள்ளும் இடமாக அதை வைத்திருப்பது அவசியம்.
பாடாங் திடல் என்றுமே ஒரு துடிப்பான விளையாட்டு மைதானமாக இருந்து வந்துள்ளது. அது தொடர வேண்டும். அந்த இடத்தை பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் அதே வேளையில் அது தந்த அனுபவங்கள் பற்றியும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
பாடாங் திடலுக்கு எதிராக உள்ள நகர மண்டபக் கட்டடம், அதில் ஒரு காலம் அமைந்திருந்த அரசின் அமைச்சுகள், அருகிலுள்ள முந்திய உச்ச நீதிமன்றக் கட்டடம், அதையடுத்து உள்ள நாடாளுமன்றக் கட்டடம் என நவீன சிங்கப்பூரின் வரலாற்றையே மாணவர்களுக்கு எடுத்துக்கூறலாம்.
பாடாங் தேசிய மரபுடைமை ஆக்கப்பட்டு இருப்பது இதற்கெல்லாம் வகை செய்யும்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தேசிய தின ராணுவ மரியாதை அணிவகுப்பு இங்கு நடைபெறும் என்று தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் அறிவித்துள்ளது, சமூகத்திலும் அரசியலிலும் பாடாங் திடல் பெற்றிருக்கும் தனிச்சிறப்பைக் காட்டுகிறது.
பாடாங் திடலுக்கு எதிரே பிரம்மாண்டமாகக் காட்சி தரும் நகர மண்டபக் கட்டடம் மத்திய வட்டாரத்தின் முக்கிய அடையாளம் என்றால், அதற்கு எதிரே உள்ள பாடாங் திடல் அதற்குச் சற்றும் குறைவில்லாத சிறப்புடன் தேசிய சின்னமாக விளங்குகிறது.
அதை என்றென்றும் போற்றிப் பாதுகாப்போம்.