2030 வாக்கில் மேலும் 1 மில்லியன் மரங்கள் இயக்கத்தின்கீழ் பசுமைவளம்
சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டு வாக்கில் தீவு முழுவதும் புதிதாக ஒரு மில்லியன் மரங்களை நடவேண்டும் என்ற இலக்கோடு ஓர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த இயக்கத்தின்கீழ் இதுவரை ஏறக்குறைய 400,000 மரங்கள் நடப்பட்டு இருக்கின்றன. பள்ளிக்கூடங்கள், குடியிருப்பு, தொழிற்பேட்டைகள் போன்ற இடங்களில் அவை வளர்ந்து வருகின்றன.
இதற்கு 61,000க்கும் மேற்பட்ட சமூகத்தினர் உதவி இருக்கிறார்கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தெரிவித்தார். அவர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
'மேலும் மில்லியன் மரங்கள்' இயக்கம் 2020 எப்ரலில் தொடங்கப்பட்டது. சிங்கப்பூரை பசுமை வள நகராக உருமாற்றுவதற்கான முயற்சிகளின் முக்கிய அங்கமாக அந்த இயக்கம் திகழ்கிறது என்பதை திரு லீ சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரின் நகரச் சூழலை மேம்படுத்தி பருவநிலை மாற்ற பாதிப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பசுமை வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மில்லியன் மரங்கள் இயக்கத்தை தேசிய பூங்காக் கழகம் தொடங்கியது.
இந்த தேசிய இலக்கை நிறைவேற்ற உதவும் வகையில், நேற்று நன்யாங் அவென்யூ நெடுகிலும் உள்ள தங்கள் வளாகத்தில் இந்தப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் மொத்தம் 100 அரிய மரக்கன்றுகளை நட்டனர்.
இந்தப் பல்கலைக்கழக மரம் நடும் திட்டத்திற்கு மாணவர்கள் தலைமையிலான 'எர்த்லிங்க்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு வழிகாட்டி உதவுகிறது.
அடுத்த ஏழாண்டுகளில் வளாகத்திலும் வளாகத்தைச் சுற்றிலும் மேலும் மரங்களை நடுவதற்கான திட்டம் இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது.

