செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
eaf7a5f8-60bf-48a5-a933-43dba02397e9
-

பூச்சி மருந்து நிறுவனங்களின் சேவைக்குத் தேவை கூடியது

சிங்கப்பூரில் டெங்கிக் காய்ச்சல் அதிகரிக்கும் சூழலில் பூச்சி மருந்து நிறுவனங்களுக்குத் தேவை கூடி இருக்கிறது. தனது சேவைகளுக்கு ஏறக்குறைய 60% தேவை அதிகமாகி இருப்பதாக ஒரு நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 24,822 பேருக்கு டெங்கி தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியிருப்பு இடங்கள், கட்டுமான இடங்கள், வர்த்தக இடங்களில் பூச்சி மருந்து நிறுவனங்கள் அடிக்கடி சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. டெங்கி கொசு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் தனது சேவைக்கான தேவை, சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் மே மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் கிட்டத்தட்ட 60% கூடியுள்ளதாக 'ஆர்ட்வோல்ஃ பெஸ்ட்கேர்' என்ற நிறுவனம் கூறியது.

போலிக் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி: நால்வர் கைது

வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து போலியான குறுஞ்செய்தியை அனுப்பி மோசடி வேலைகளில் ஈடுபட்டு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேர் ஆகஸ்ட் 18 மற்றும் 19ஆம் தேதிக்கு இடையில் கைதாகி உள்ளனர்.

அவர்களில் மூவர் ஆடவர்கள். ஒருவர் பெண். அவர்களுக்கு வயது 34 முதல் 46 வரை. அத்தகைய மோசடிகள் குறித்து ஆகஸ்ட் மாதம் பல புகார்கள் வந்ததாக காவல்துறை நேற்று தெரிவித்தது.

மோசடிக்கு ஆளானவர்களில் ஒருவர் ஏறக்குறைய $940 இழந்துவிட்டார். வங்கி அட்டை, பயன்படுத்த முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறும் போலி செய்தியை மோசடிக்காரர்கள் அனுப்பி, தனிப்பட்ட விவரங்களை அனுப்புமாறு கேட்டு ஏமாற்றிவிடுவார்கள் என்று காவல்துறை விளக்கியது.

அந்த நால்வர் மீதும் நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட இருந்தது.