வெளிநாட்டுத் திறனாளர்களைத் தொடர்ந்து ஈர்ப்பது அவசியம்

வெளிநாட்டுத் திறனாளர்களைத் தொடர்ந்து ஈர்ப்பது அவசியம்

2 mins read
3bff8140-9f46-445f-96e1-19f20722ed35
ஜெர்மனியில் திறனாளர்கள் தேவை எனும் செய்தியைப் படிக்கும் சிங்கப்பூரர். படம்: தகவல் தொடர்பு அமைச்சு -

சிங்கப்பூரில் உலகத்தரமிக்க ஆற்றல் வளத்தை நாம் பலப்படுத்த வேண்டும் என்று தேசிய நாள் பேரணி செய்தியில் பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி கூறி இருக்கிறார்.

ஒவ்வொரு சிங்கப்பூரரின் ஆற்றலும் முற்றிலும் வெளிப்படும் வகையில் செயல்பட்டு, சொந்த ஆற்றல் வளத்தை உருவாக்க நம்மால் ஆன அனைத்தையும் நாம் செய்வோம் என்றார் அவர்.

அதேவேளையில், தலைசிறந்த ஆற்றல் வளம் என்று வரும்போது போதுமான அளவுக்கு அந்த வளம் எப்போதுமே இருக்காது என்ற திரு லீ, இந்த யுகத்தில் ஒரு நாட்டின் வெற்றியை நிர்ணயிப்பதில் ஆற்றல் வளம் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

ஆகையால், முதலீடுகளைக் கவர்ந்து அவற்றைத் தக்கவைத்துக் கொள்வதில் நாம் ஒருமித்த கவனத்தைச் செலுத்துவது போலவே தலைசிறந்த ஆற்றல்மிக்கவர்களைக் கவர்ந்து ஈர்த்து அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் நாம் ஒருமித்த கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது என்றார் திரு லீ.

இது சிங்கப்பூருக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கும் தேவையானதாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பல நாடுகளும் தலைசிறந்த அனைத்துலக ஆற்றல்மிக்கவர்களைக் கவர்ந்து ஈர்க்க சிறப்பு முயற்சிகளை எடுக்கின்றன என்பதை அவர் சுட்டினார்.

பெரும் எண்ணிக்கையில் வெளிநாட்டினர் இங்கு வந்து வசிப்பது, வேலை பார்ப்பது பற்றி சிங்கப்பூரர்கள் கவலைப்படுவது சரியானதுதான்.

இந்தப் பிரச்சினையைச் சமாளித்து சிங்கப்பூரர்களின் கவலையைப் போக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் உள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு பட்டத்தொழிலர்களின் எண்ணிக்கையை நிர்வகிக்கும் அதேநேரத்தில், நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொண்டு செய்யக்கூடிய தலைசிறந்த ஆற்றல்மிக்கவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் முயற்சிகளை நிறுத்திவிடக் கூடாது என்றார் அவர்.