கொவிட்-19 கொள்ளைநோயை சிங்கப்பூர் எதிர்கொண்ட விதம் குறித்து தேசிய தினப் பேரணியில் தொகுத்துப் பேசிய பிரதமர் லீ சியன் லூங், நோய்ப் பரவலின் பாதிப்புகளை சிங்கப்பூர் சிறப்பாகக் கையாண்டு, இந்நோய்க்கு எதிரான போராட்டத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்றார்.
கொரோனா பரவலின் ஒவ்வொரு அலையின் பாதிப்பையும் மேலும் திறம்பட சிங்கப்பூர் சமாளித்தது. நோய் பரவலை தாமதப்படுத்தியது. ஒமிக்ரான் பிஏ.5 அலை இப்போது தணிந்து வருகிறது.
இதுவரை, சிங்கப்பூரில் கொவிட்-19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 1,600க்கும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளைப் போல இறப்பு நிகழ்ந்திருந்தால், சிங்கப்பூர் இப்போது 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட இறப்புகளை எளிதில் சந்தித்திருக்கக்கூடும். ஒன்றுபட்ட முயற்சிகள் பல உயிர்களைக் காத்தன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சமுதாயம் அரசாங்கத்தின் மீது பெருமளவில் நம்பிக்கை கொண்டிருப்பதே சிங்கப்பூரின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம்.
எடுத்துக்காட்டாக, சில நாடுகளைப் போலல்லாமல், சிங்கப்பூரில் உள்ளவர்கள் முகக்கவசம் அணியும் விதிமுறைகளை எவ்வாறு ஏற்று நடந்தார்கள் என்பதை திரு லீ சுட்டினார்.
சரியான முறையில் செயல்பட்டு, அடுத்தவரின் ஆதரவைப் பெறுவதில் சிங்கப்பூரர்களிடையே காணப்படும் நம்பிக்கைக்கும் பிரதமர் லீ ஐந்து எடுத்துக்காட்டுகளைப் பகிர்ந்துகொண்டார்:
1. அரசாங்க அறிவிப்பின்படி தங்களின் முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல்.
2. முகக்கவசம் அணிதல், குறிப்பாக உட்புற இடங்களில்
3. வீட்டிற்கு வந்த பிறகு கைகளைக் கழுவுதல்.
4. ஏஆர்டி கருவிகளை நிபுணத்துவத் திறனுடன் பயன்படுத்திக் கிருமிப் பரிசோதனை செய்தல்.
5. ஏஆர்டி கருவியில் இரு சிவப்பு கோடுகள் தோன்றினால் மற்றவர்களைப் பாதுகாக்கத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல்.
கொவிட்-19 மீள்திறன் பதக்கம்
கொள்ளைநோய்ப் பரவலின்போது கொவிட்-19 உடன் நேரடியாகப் போராட உதவியவர்களுக்கு 'கொவிட்-19 மீள்திறன் பதக்கம்' எனப்படும் அரசு விருது வழங்கப்படும்.
அரசாங்கத்தின் இந்த புதிய விருது, தனிமனிதர்கள், குழுக்கள் என அனைத்து பிரிவினரையும் அங்கீகரிக்கும் என்று பிரதமர் லீ நேற்று தனது தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.
கூடுதலாக அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர்கள் பாராட்டு விருது, பொதுச் சேவை விருது, பொது நிர்வாக விருது போன்ற நடப்பிலிருக்கும் அரசு விருதுகளைப் பெறுவர்.
கொவிட்-19 கொள்ளைநோயை எதிர்த்துப் போராடியதற்காக இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது என்பதைக் காட்ட, பெயர், சின்னத்துடன் ஒரு சிறப்புக் குறிப்பும் இடம்பெற்றிருக்கும் என்று பிரதமர் லீ கூறினார். விருது பெறுவோர் பெயர்கள் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெறும்.

