உருமாறும் பாய லேபார் ஆகாயப்படைத் தளம்

உருமாறும் பாய லேபார் ஆகாயப்படைத் தளம்

3 mins read
f57d7fd4-9c22-4b1e-ac3e-0c50158c4ed2
-

பாய லேபா­ரில் அமை­ய­வி­ருக்­கும் எதிர்­கால நக­ரில் 150,000 புதிய பொது மற்­றும் தனி­யார் வீடு­கள் கட்­டப்­படும் என்று மதிப்­பி­டப்­பட்டு இருக்­கிறது. இந்த எண்­ணிக்கை, பொங்­கோல், செங்­காங் ஆகிய இரண்டு பகு­தி­க­ளி­லும் இருக்­கும் மொத்த வீடு­க­ளின் எண்­ணிக்­கைக்கு ஏறக்­கு­றைய சம­மா­னது.

பாய லேபார் ஆகா­யப்­ப­டைத் தளம் 2030களில் வேறு இடத்­திற்கு மாறு­கிறது. அதற்­குப் பிறகு அந்­தப் பகு­தி­யில் வீடு­க­ளைக் கட்­டத் திட்­ட­மி­ருக்­கிறது.

பாய லேபார் வட்­டார மறு­மேம்­பாடு திட்­டங்­க­ளைப் பற்றி தமது தேசிய நாள் பேரணி உரை­யில் விளக்­கிய பிர­த­மர், இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

பாய லேபார் விமா­னத் தளம் சாங்­கிக்கு இட­மா­று­வ­தால் ஹவ்­காங், மரின் பரேடு, பொங்­கோல் போன்ற அரு­கில் உள்ள நகர்­களில் கட்­டட உய­ரக் கட்­டுப்­பா­டு­களை அகற்ற முடி­யும் என்­றார்.

அதா­வது, இந்த நக­ரங்­களில் உள்ள இடங்­கள் இன்­னும் சிறந்த முறை­யில் பயன்­ப­டுத்­தப்­படும். மேலும் பல வச­தி­க­ளு­டன் அவை மீண்­டும் உரு­வாக்­கப்­படும் என்று திரு லீ விளக்­கி­னார். இந்த மேம்­பா­டு­கள் ஒரே நாளில் நிகழ்ந்­து­வி­டாது என்ற அவர், அதற்­குப் பல ஆண்­டு­கள் ஆக­லாம் என்­றார்.

இந்­தத் திட்­டங்­க­ளின் மூலம் சிங்­கப்­பூ­ரின் கிழக்­குப் பகு­தியை முற்­றி­லும் புதிய வடி­வில் மாற்­றி­ய­மைக்க முடி­யும் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

எதிர்­கா­லத்­தில் சிங்­கப்­பூ­ரில் இடம் இல்­லா­மல் போகக்­கூ­டிய நிலை இருக்­காது. போதிய வீடு­களும் இருக்­கும். அந்த வீடு­கள் கட்­டுப்­ப­டி­யா­கக் கூடி­ய­வை­யா­க­வும் இருக்­கும் என்ற திரு லீ, அர­சாங்­கம் தனது ஆய்­வு­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் செய்து முடித்­தி­ருக்­கிறது என்று குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குப் போதிய வீடு­க­ளைக் கட்­டத் தேவைப்­படும் நிலம் இல்­லா­மல் போக­லாம் என்ற பிரச்­சினை இருக்­காது. வீடு­களும் வாங்க முடி­யாத அள­வுக்கு இருக்­கும் என்ற நிலை­யும் வராது. ஆனால், உண்­மை­யி­லேயே பிரச்­சினை என்­ன­வென்­றால் இங்கு பிறந்து வளர்ந்து அந்த வீடு­களில் குடி­யி­ருக்க போதிய பிள்­ளை­கள் இருப்­பார்­களா என்­ப­து­தான் என்று திரு லீ தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

பாய லேபார் விமா­னத் தளம் வேறு இடத்­திற்கு மாறும்­போது பாய லேபா­ரில் ஏறக்­கு­றைய 800 ஹெக்­டர் நிலம் கிடைக்­கும். அதில் வீடு­க­ளை­யும் தொழில் பேட்­டை­க­ளை­யும் அமைக்­க­லாம்.

அந்த விமா­னத் தளத்­தில் 3.8 கி.மீ. நீள­முள்ள ஓடு­பாதை இருக்­கிறது. அந்த ஓடு­பா­தையை பாய லேபார் நக­ரின் மத்­திய முது­கெ­லும்­பா­கத் திக­ழும் வகை­யில் அமைக்க முடி­யும். அதை பசு­மை­மிகு இணைப்பு வழி­யாக அல்­லது சமூக இட­மாக ஒரு முனை­யில் இருந்து அந்த நக­ரின் மறு­முனை வரை நீளும் ஒன்­றாக அமைக்க முடி­யும் என்­றார் திரு லீ.

முது­கெ­லும்­பு­போல் அமை­யும் அந்­தப் பாதைக்கு இரு பக்­கத்­தி­லும் அர­சாங்­கம், தனி­யார் வீடு­கள் கட்ட முடி­யும். பாய லேபா­ருக்கே உரிய கவர்ச்சி மிகுந்த பாரம்­ப­ரிய அம்­சங்­க­ளு­டன், தனிச்­சி­றப்பு அம்­சங்­க­ளு­டன் அது திக­ழும் என்­றும் திரு லீ தெரி­வித்­தார்.

அர­சாங்­கம் சிங்­கப்­பூரை எப்­படி எப்­ப­டி­யெல்­லாம் உரு­மாற்­று­கிறது என்­ப­தற்கு பாய லேபார் ஓர் எடுத்­துக்­காட்­டு­தான் என்று கூறிய திரு லீ, மாபெ­ரும் தென்­புல நீர் முகப்பு, ஜூரோங் ஏரி மாவட்­டம் போன்ற இதர திட்­டங்­க­ளை­யும் எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்­டார்.