கொள்ளைநோய் சூழ்நிலைகளில் தனிமைப்படுத்துதல், பரிசோதனை வசதிகள் ஆகியவற்றுக்கு இடமளிக்கும் வகையில் சாங்கி விமான நிலையத்தின் புதிய ஐந்தாம் முனையம் வடிவமைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. தேைவப்படும் வேளையில் சிறிய முனையமாக அதனைப் பிரித்து இயக்கும் வகையில் அது அமைக்கப்படும்.
பயணிகள் தொடவேண்டிய வசதிகள் தொடர்பற்றதாக இருக்கும். காற்று மூலம் பரவக்கூடிய நோய் அபாயம் ஏற்படும் சூழலில் சுத்தமான காற்றை அதிகரிக்கும் வகையில் காற்றோட்ட வசதிகள் அமைக்கப்படும்.
பசுமைச் சூழலைக் கொண்டதாகவும் அதிக எரிசக்தி ஆற்றலுடனும் அந்த முனையம் இருக்கும் என்றார்.
கொவிட்-19 கொள்ளைநோய் சமாளிப்பில் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் விமான நிலைய வசதிகள் நிறுவப்படும். வருங்காலத்திலும் கொள்ளைநோய் ஏதேனும் பரவினால் அதனை அதிக ஆற்றலுடன் சமாளிக்கும் வகையிலும் அதிக மீள்திறனுடனும் ஐந்தாம் முனையம் கட்டப்படும் என்றது அமைச்சு.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் நின்றுபோன ஐந்தாம் முனையக் கட்டுமானப் பணிகள் இன்னும் ஈராண்டுகளில் மீண்டும் தொடங்கும்.
பிரதமர் லீ சியன் லூங் நேற்று தமது தேசிய தினப் பேரணியில் தெரிவித்ததற்கு இணங்க அந்த விமான நிலைய முனையத்தின் வடிவமைப்பு விவரங்களை அமைச்சு வெளியிட்டது.
"2030ஆம் ஆண்டு நடுப்பகுதிவாக்கில் கட்டி முடிக்கப்படும்போது, சிங்கப்பூர் எப்படிப்பட்ட நாடு என்பதை ஐந்தாம் முனையம் உலகுக்கு உணர்த்தும்.
"விமானப் பயணப் போக்குவரத்து கொவிட்-19க்கு முந்திய நிலையில் பாதியைக் கடந்துவிட்டது. நீண்டகாலப் போக்கில், இந்த வட்டார நடுத்தர வர்க்கத்தினர் விரைவாக முன்னேறுவதால் விமானப் பயணங்கள் அதிகரித்தவாறு இருக்கும்.
"ஐந்தாம் முனையம் எல்லா சிங்கப்பூரர்களும் பெருமைப்படும் விதத்தில் அமையும்," என்றும் அவர் கூறினார்.
ஐந்தாம் முனையம் குறித்து பிரதமர் லீ கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாகத் தெரிவித்திருந்தார். மறு ஆண்டே அதனைத் தொடங்க அவர் திட்டமிட்டு இருந்தார்.
முனையம் 1, முனையம் 3 ஆகியவற்றை ஒன்றிணைத்தாலும் அதனைவிட பெரியதாக அந்த முனையம் இருக்கும். ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளுக்குச் சேவையாற்றக்கூடிய பெரும் முனையமாக அது இருக்கும்.
இதுகுறித்து நேற்று விவரித்த போக்குவரத்து அமைச்சு, இந்த முனையம் இரு கட்டங்களாக கட்டப்படும் வகையிலும் விமானப் பயணிகளின் போக்குவரத்து அதிகரிப்புக்கு ஈடுகொடுக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறியது.
பசுமை விமான எரிபொருள் உள்ளிட்ட மாற்று எரிபொருளைப் பயன்படுத்தத் தயாராகும் விதத்திலும் முனையம் அமையும். 2050ஆம் ஆண்டுவாக்கில் கரிம வெளியேற்றம் இல்லாத நிலைக்கான இலக்கை எட்ட இது உதவும் என்றது அமைச்சு.
சாங்கி ஈஸ்ட் வட்டாரத்தில் 1,080 ஹெக்டர் நிலப்பரப்பில் ஐந்தாம் முனையம் கட்டப்பட உள்ளது. இதுவே சாங்கி விமான நிலையத்தின் ஆகப்பெரிய விரிவாக்கம்.

