சிங்கப்பூரின் மிகப்பெரிய துறைமுகமாக துவாஸின் நடவடிக்கைகளை அதிகாரிகள் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், ஆண்டு இறுதிக்குள் இங்கு மேலும் மூன்று கப்பல் நிறுத்தும் இடங்கள் செயல்படத் தொடங்கும்.
இதனோடு, துவாஸ் துறைமுகத்தில் செயல்படும் கப்பல் நிறுத்தும் இடங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயரும்.
பிரதமரின் தேசிய தினப் பேரணி உரையுடன் இணைந்து போக்குவரத்து அமைச்சும் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
துவாஸ் துறைமுகத்தின் முதற் கட்ட கட்டுமானத்தில் இடம்பெறும் இந்த கப்பல் நிறுத்தும் இடங்கள், 20 மில்லியன் இருபது அடி அளவுள்ள கொள்கலன்களை கையாளக்கூடிய 21 ஆழ்கடல் கப்பல் நிறுத்தும் இடங்கள் ஆகும்.
2040களில் முழுமையடையும் துவாஸ் துறைமுகத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இவை திறக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் துறைமுக ஆணையம் (பிஎஸ்ஏ), தஞ்சோங் பகார், கெப்பல், பிரானி ஆகிய துறைமுகப் பகுதிகளில் உள்ள தனது அனைத்து செயல்பாடுகளையும் 2027க்குள்ளும் பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தின் செயல்பாடுகளை 2040 வாக்கிலும் துவாசுக்கு மாற்றும். இதனால், பிரதான நீர்முகப்பு நிலப்பரப்பு காலியாகிறது.
இக்காலகட்டத்தில், துவாஸ் துறைமுகம் ஆண்டுக்கு 65 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் முழு கொள்ளளவைக் கொண்டிருக்கும், இது சிங்கப்பூரின் தற்போதைய கொள்ளளவைவிட இரட்டிப்பாகும்.
தஞ்சோங் பகாரில் உள்ள அனைத்து கொள்கலன் செயல்பாடுகளும் ஏற்கெனவே துவாசுக்கு மாற்றப்பட்டுவிட்டது.
துவாஸ் துறைமுகத்தின் முதல் இரண்டு கப்பல் நிறுத்தும் இடங்களும் கடந்த ஆண்டு டிசம்பரில் விநியோகச் சங்கிலி நெருக்கடியின்போது துறைமுக நடவடிக்கைகளின் செயல்பாடுகள் அதிகரித்த வேளையில், திறக்கப்பட்டன.
"மற்ற நாடுகளில் துறைமுகங்கள் மூடல்கள், கடுமையான நெரிசல், நீண்ட கால தாமதங்களை அனுபவித்தபோதும் சிங்கப்பூர் எங்கள் துறைமுகம் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் செயல்பட்டது. உண்மையில், கடந்த ஆண்டு, சிங்கப்பூர் 37.5 மில்லியன் கொள்கலன்களையும் கையாண்டது. உலகின் பரபரப்பான கப்பல் பரிமாற்ற மையமாக சிங்கப்பூர் தனது நிலையைத் தக்க வைத்திருக்கிறது," என்று பிரதமர் லீ கூறினார்.
"இப்போதிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் துவாஸ் துறைமுகக் கட்டுமானம் முழுமையாக நிறைவடையும்போது, உலகின் மிகப்பெரிய முழுமையான தானியங்கி துறைமுகத்தை சிங்கப்பூர் பெற்றிருக்கும். மேலும் அது, கடல்துறை செயல்பாடுகளில் சிங்கப்பூரை முன்னணியில் வைத்திருக்கும்.
துவாஸ் துறைமுகம் முழுமையாக தானியங்கி, மின்னிலக்கமயமாக்கப்படும்.

