கொவிட்-19க்குப் பிந்திய உலகில் சிங்கப்பூரின் வெற்றியை உறுதிப்படுத்த, தலைசிறந்த திறனாளர்களை ஈர்த்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
"உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த திறனாளர்கள் சிங்கப்பூருக்கு வருவதைத் தீவிரமாக பரிசீலிக்க வைக்க நாங்கள் விரும்புகிறோம்," என்ற அவர், இதை எட்ட மனிதவள அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு, பொருளியல் அமைப்புகள் விரைவில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என்றார்.
தலைசிறந்த திறனாளர்களை ஈர்க்க சிங்கப்பூரிடம் ஏற்கெனவே திட்டங்கள் உள்ளன. ஆனாலும், சிறந்த ஆற்றலுடைய துறைகளில் அது கூடுதலானவற்றை செய்ய வேண்டும் என்று பிரதமர் லீ கூறினார்.
சிங்கப்பூர், உலகத் தரம்வாய்ந்த திறனாளர்களை உருவாக்க வேண்டும். ஏனெனில், ஒரு நாட்டின் வெற்றிக்கு திறனாளர்களே வித்தியாசத்தை ஏற்படுத்தும் காலம் இது என்றார் அவர்.
தனது சொந்த திறனாளர்களை உருவாக்கவும் ஒவ்வொரு குடிமகனும் அவரது முழு ஆற்றலை எட்ட உதவவும் சிங்கப்பூர் ஆவன செய்து வருகிறது என்று சொன்ன அவர், "தலைசிறந்த திறனாளர்கள் என வரும்போது, நம்மால் போதும் என்று சொல்லவே முடியாது," என்றார்.
"எனவே, முதலீடுகளை ஈர்த்து அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள நாம் எப்படி கவனம் செலுத்துகிறோமோ, அதேபோல தலைசிறந்த திறனாளர்களை ஈர்த்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் நாம் கவனம் செலுத்த வேண்டும்," என்று பிரதமர் லீ கூறினார்.
ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகள் உலகளவில் தலைசிறந்த திறனாளர்களை ஈர்க்க முயற்சி எடுத்து வருகின்றன.
"திறனாளர்களை ஈர்ப்பதற்கான இந்த உலகளாவிய போட்டியில் சிங்கப்பூர் பின்தங்கிவிடக்கூடாது," என்றார் அவர்.
உண்மையைச் சொல்லப் போனால், மிகச் சிறந்த திறனாளர்களை ஈர்க்க சிங்கப்பூருக்கு வாய்ப்பு உள்ளது. கொவிட்-19ஐ சிங்கப்பூர் எதிர்கொண்டுள்ள விதம், அது மேலும் தனித்து நிற்க உதவுகிறது.
"தரம், நம்பகத்தன்மை, செயலாற்றல் ஆகியவை அடங்கிய நமது நம்பிக்கைக்குரிய சிங்கப்பூர் சின்னம் நமக்கு ஒரு சாதகமான நிலையை வழங்கியிருக்கிறது," என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.
"சிறந்த திறனும் ஆற்றலும் உடையவர்கள் தாங்கள் செல்வதற்கான, தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்பாக உணரக்கூடிய, தாங்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களைத் தேடி வருகின்றனர்," என்பதைப் பிரதமர் லீ சுட்டினார்.
இதற்கிடையே, "திறனாளர்கள் உள்ள, அரசியலும் கொள்கைகளும் நிலையாக உள்ள, அமைப்புமுறை வேலை செய்கிற இடங்களில் முதலீடு செய்ய வர்த்தகங்கள் விரும்புகின்றன," என்றார் அவர்.
அந்த வகையில், திறனாளர்கள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களின் ஆர்வத்தை ஈர்ப்பதில் சிங்கப்பூர் வெற்றிகரமாக இருந்து வருகிறது.

