திட்டமிடப்பட்ட ஜிஎஸ்டி உயர்வு இரு கட்டங்களாக நடப்புக்கு வரும். தற்போது 7 விழுக்காடாக உள்ள ஜிஎஸ்டி 2023 ஜனவரி 1 முதல் 8 விழுக்காட்டுக்கும் 2024 ஜனவரி 1 முதல் 9 விழுக்காட்டுக்கும் உயர்த்தப்படும்.
ஜிஎஸ்டி உயர்த்தப்படுவதால் வாழ்க்கைச் செலவினம் உயரும் என பலரும் கவலைப்படுவதைத் தாம் அறிந்திருப்பதாகக் கூறிய பிரதமர் லீ, உதவி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தேவைப்பட்டால் கூடுதல் உதவிகள் அளிக்கப்படும் என்றும் சிங்கப்பூரர்களுக்கு உறுதி அளித்தார்.
உதாரணமாக, சிடிசி பற்றுச்சீட்டு எனப்படும் சமூக மேம்பாட்டு மன்றங்களின் பற்றுச்சீட்டுகள் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க குடும்பங்களுக்கு மட்டுமின்றி குடியிருப்பு வட்டாரக் கடைகள் உணவு நிலையங்களுக்கும் உதவி புரிகின்றன.
இதுவரை, 18,000க்கும் மேற்பட்ட குடியிருப்பு வட்டாரக் கடைகள், உணவு நிலையங்கள் மற்றும் காப்பிக்கடைகள் இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கின்றன.
பெரும்பாலான குடும்பங்கள் சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி உள்ளன. இதற்காக கிட்டத்தட்ட $180 மில்லியன் செலவிடப்பட்டு உள்ளது.
இது மட்டுமின்றி, படிப்படியாக இதர உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மூவறை வீவக வீட்டில் வசிக்கும் இரு பிள்ளைகளையுடைய தம்பதியினரை அதற்கு அவர் உதாரணம் காட்டினார்.
அந்தக் குடும்பம் ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் $3,700 உதவியை 12 மாதங்களுக்குப் பெறும். அந்தத் தொகை பின்வரும் உதவிகளை உள்ளடக்கியது.
இந்த மாதம் அவர்களுக்கு $1,400 ரொக்கம் கிடைக்கும்.
அக்டோபரில் யு-சேவ். சேவை மற்றும் பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியை அக்குடும்பம் பெறும்.
அடுத்த ஜனவரியில் $200 சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும். கடந்த மே மாதம் வழங்கப்பட்ட $100 சிடிசி பற்றுச்சீட்டைத் தொடர்ந்து இது வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அவர்களின் மெடிசேவ் கணக்குகளில் $300 வரவு வைக்கப்படும்.
- என்று விவரித்த பிரதமர், வரும் நவம்பர் மாதம் உலகக் கிண்ண காற்பந்து நடப்பதை ஒட்டி அதிர்ஷ்ட தேவதை ஓய்வெடுப்பதால் அந்த மாதம் மட்டும் உதவி இருக்காது என்று கூட்டத்தினரின் பலத்த சிரிப்புக்கிடையே தெரிவித்தார்.
"இருப்பினும் டிசம்பர் மாதம் அந்தத் தேவதை திரும்பி வரும்," என்றும் திரு லீ கூறினார்.
"ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி கிடைக்கும். வருமான வரம்பு, குடியிருக்கும் வீட்டின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து உதவித்தொகை அமையும்," என்றார் அவர்.
ஜிஎஸ்டி உயர்வை ஈடுசெய்ய உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் அடுத்த ஆண்டு கைகொடுக்கும். $6.6 பில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டத்தின்கீழ், 21 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு சிங்கப்பூரரும் ஐந்தாண்டுகளுக்கு $700 முதல் $1,600 வரை ரொக்க உதவி பெறுவார்.
இதன் முதல் உதவித்தொகை வரும் டிசம்பரிலேயே வழங்கப்படும் என்றார் பிரதமர்.

