வற்புறுத்துதல், பிரசாரம், தவறான தகவல் ஆகியவற்றை சிங்கப்பூரர்கள் அதிகம் எதிர்நோக்குவதால், நாட்டின் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தவும் சரியான புரிந்துணர்வைக் கட்டிக்காக்கவும் நமது தேசிய நலன்கள் 'நிலையான கட்டாயங்கள்' ஆக விளங்குகின்றன என்று பிரதமர் லீ கூறினார்.
சிங்கப்பூரராக இருப்பதில் பெருமை கொள்ளுதலும் வலுவான தேசிய அடையாளத்தைக் கொண்டிருப்பதும் பிரதமர் குறிப்பிட்ட மூன்று 'நிலையான கட்டாயங்களில்' அடங்கும்.
"அனைத்து வகையான வற்புறுத்துதல், பிரசாரம், தவறான தகவல், கிளர்ச்சி ஆகியவை சமூக ஊடகம், தகவல் அனுப்பும் செயலிகள் மூலம் சிங்கப்பூரர்களைச் சென்றடைகின்றன.
"நாடுகளுக்கு இடையே போட்டிகள், பதற்றங்கள், பிரச்சினைகள் என்று வரும்போது எந்த நாட்டுக்கு ஆதரவளிப்பது போன்ற சூழ்நிலைகளில் இதுபோன்ற வேண்டாத அம்சங்கள் நம்மை மேலும் குழப்பநிலைக்கு இட்டுச்செல்லும்," என்று திரு லீ தமது மாண்டரின் மொழி உரையில் விளக்கினார்.
"'நமக்கு வலுவான தேசிய அடையாள உணர்வு அவசியம். அப்போதுதான் நமது நாட்டு நிர்மாண முயற்சிக்கு ஓர் அர்த்தம் இருக்கும்," என்று குறிப்பிட்ட பிரதமர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் முன்னேறும் சிங்கப்பூர் கலந்துரையாடல் திட்டம் அதற்கு வழிவகுக்கும் என்றார்.
"உலகமயமாதல் குறைந்து வரும் வேளையிலும் நாடுகள் தங்கள் கொள்கைகளில் உள்நோக்கி சென்று தன்னைப்பேணித்தனத்துக்கு மாறும் வேளையிலும் சிங்கப்பூர் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் உலகத்துடன் இணைப்பில் இருக்க வேண்டும்.
"நாம் நமக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்ய முடியாது அல்லது நாம் உற்பத்தி செய்பவற்றை நாமே முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அது கணினிச் சில்லுகளாக இருந்தாலும் சரி, பெட்ரோலிய இரசாயனமாக இருந்தாலும் சரி.
"நாம் தொடர்ந்து வாழ்வதற்கு வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுச் சந்தைகள், அற்புதமான போக்குவரத்து மற்றும் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்புகொள்ளும் ஆற்றல் ஆகியவை அவசியம் தேவை," என்றார்.
"நாம் வேகமானவர்களாகவும் விவேகமானவர்களாகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்தால், இவற்றில் நமது பங்கைப் பெறுவதுடன் மேலும் பலவற்றைப் பெறுவோம்," என்றும் பிரதமர் கூறினார்.

