'புயல் உருவாகும் நிலையில் புறச் சூழல்'

'புயல் உருவாகும் நிலையில் புறச் சூழல்'

2 mins read
a3662641-69e8-4819-b5fc-ca73d57d1d5e
-

வெளிச் சவால்களைச் சமாளிக்க ஏதுவாக மனரீதியில் ஆயத்தமாக வேண்டும், ஐக்கியம் காக்க வேண்டுமென பிரதமர் அறைகூவல்

சிங்கப்பூருக்கு வெளியே நிலையற்ற சூழல் நிலவுகிறது. புயல் உருவாகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய நாள் பேரணி செய்தியில் எச்சரித்து இருக்கிறார்.

கொவிட்-19 தொற்று சவாலை உள்நாட்டில் சமாளிக்கும் நாம், அதேவேளையில், அந்தப் புறச் சவால்களைச் சமாளிக்கவும் ஆயத்தமாக வேண்டும் என்று பிரதமர் லீ அறைகூவல் விடுத்து இருக்கிறார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிளவு அதிகமாகி வருகிறது. தைவான் பிரச்சினை அதற்கு ஒரு காரணம் என்று திரு லீ தெரிவித்தார். உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததன் விளைவாக உலக பாதுகாப்பு ஏற்பாடுகளில் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவுக்கும் இதர நாடுகளுக்கும் இடையில், குறிப்பாக அமெரிக்காவுக்கும் இதர நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பகைமைப் போக்கு உருவாகி இருக்கிறது.

இத்தகைய வெளிச் சூழ்நிலைகள் எல்லாம் சிங்கப்பூருக்கு பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று திரு லீ எச்சரித்தார்.

இந்த வட்டாரத்தில் பெரிய வல்லரசுகளுக்கு இடையில் பதற்ற மும் புவி சார்ந்த அரசியல் போட்டாபோட்டியும் அதிகமாகும் என்பதே தமது கவலை என்றார் பிரதமர் திரு லீ.

ஐரோப்பாவில் நிகழ்வதைப் போன்ற பிரச்சினை ஆசியப் பசிபிக் வட்டாரத்தில் ஏற்படாது என்று நாம் கூறிவிட முடியாது என தெரிவித்த திரு லீ, ஆகையால், அத்தகைய சவால்களைச் சமாளிக்க மனரீதியில் நாம் ஆயத்தமாக வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

அதேவேளையில், நாம் தொடர்ந்து ஐக்கியமாக இருந்து வரவேண்டும் என்று அவர் சீன மொழியில் ஆற்றிய தேசிய நாள் பேரணி உரையில் தெரிவித்தார்.