தேசிய சேவை புரிந்ததால் படிப்பில் இடைவெளி விடவில்லை என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பயிலும் விஷால் ஜெயராம் (வலம்), 22, கூறினார். தேசிய சேவை இல்லாமலிருந்திருந்தால் நிச்சயமாகத் தன் கல்விக் காலத்தில் ஓர் இடைவெளி விட்டிருப்பேன் என்று இவர் கூறுகிறார்.
"நான் தொடக்கக் கல்லூரியில் இருந்தபோது கணினிப் பொறியியல் துறை சார்ந்த படிப்பைப் படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் தேசிய சேவை முடித்தபின் உடனே அதற்காக பதிவும் செய்துவிட்டேன். ஆனால் இப்போது பல்கலைக்கழகத்தில் வேலைப் பளு காரணமாக இடைவெளி விடத் தோன்றுகிறது. ஆனால் ஈராண்டுகள் தேசிய சேவையில் கழிந்துவிட்டதால் இடைவெளி விடுவதா எனக் குழப்பமாக உள்ளது. மனவுளைச்சல் அதிகமானால் இடைவெளி எடுக்க நான் தயார்," என்றார் விஷால். தேசிய சேவை கட்டாயமில்லாமல் போனாலும் இடைவெளி விட விருப்பமில்லை என்கிறார் பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்பை முடித்துத் தற்போது தேசிய சேவை புரிந்துவரும் சசிபாலன் பாலதண்டாயுதம், 21.
"பட்டக் கல்வியை முடித்துவிட்டு வேலையில் சேரவேண்டும் என்பதே என் குறிக்கோள். இடைவெளி விட்ட பின் மீண்டும் பள்ளி வாழ்க்கைக்குத் திரும்புவது சிக்கலாக இருக்கலாம்," என்றார் அவர்.

