செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
0eb8ec14-a09d-44e6-823e-4f34065404b5
-

போக்கா நிறுவனத்தின் முன்னாள்

தலைமை நிர்வாகிக்கு $15,000 அபராதம்

போக்கா இன்டர்நேஷனல் மற்றொரு சுவைபான நிறுவனத்துடன் பரிவர்த்தனை செய்தபோது, அந்நிறுவனத்தில் தாமும் ஓர் உரிமையாளர் என்பதை போக்காவின் முன்னாள் தலைமை நிர்வாகி ஓங் எங் சிங் தெரிவிக்கவில்லை.

அதன் தொடர்பில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை திரு ஓங் ஒப்புக்கொண்டார். அவருக்கு $15,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர் நிறுவன இயக்குநர் பதவி அல்லது நிர்வாகத்தில் பொறுப்பு வகிப்பதிலிருந்து ஈராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

திரு ஓங்கை பதவி விலகும்படி போக்கா நிறுவனம் 2018 செப்டம்பரில் கேட்டுக்கொண்டது. அவரது மனைவியும் நடிகையுமான திருவாட்டி விவியன் லாய் போக்கா நிறுவன விளம்பரங்களில் முன்னர் தோன்றியுள்ளார்.

குற்றங்களைத் தடுக்க காவல்துறைக்கு உதவிய 11 பேருக்கு விருதுகள்

புக்கிட் மேராவில் ஓர் ஆடவரைத் தாக்கிய நபரைத் தடுத்த வழிப்போக்கர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு காவல்துறை பொதுமக்கள் துணிவு விருதுகளை வழங்கியுள்ளது. அவர்களில் ஒன்பது பேர் ஆண்கள், இருவர் பெண்கள்.

கடந்த ஜூன் 29ஆம் தேதி ஒரு கடைவீட்டில் தாக்குதல் நடத்திய ஆடவரைத் லாரன்ஸ் இங்கூ என்பவர் முதலில் தடுக்க ஓடினார். வேறு சிலர் சேர்ந்துகொண்டனர்.

காவல்துறையினர் வரும் முன்னர் ஆறு பேரும் சேர்ந்து, தாக்குதல் நடத்தியவரை அடக்கினர். அவர்களைப் பாராட்டும் பொருட்டு கடந்த 16ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், ஐந்து குற்றச்செயல்களில் குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறைக்கு உதவிய இருவரும் விருதுகள் பெற்றனர். மோசடியுடன் சம்மந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க் எனப்படும் நிலைவட்டுகளைக் கடத்தும் முயற்சியை கோலின் சென், பெர்னார்ட் சான் இருவரும் தடுத்தனர். $29,000 மதிப்புள்ள அந்த நிலைவட்டுகள் சிங்கப்பூர் அரசாங்க அமைப்புக்குச் சொந்தமானவை.

கிளார்க் கீயில் காணொளி எடுத்த ஆடவருக்கு நன்னடத்தை உத்தரவு

பெரிய கூட்டங்களுக்கு அனுமதி இல்லாதபோது ஜனவரியில் கிளார்க் கீயில் காணொளி எடுத்த இளையருக்கு ஆறு மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்பு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

லீ ஹர்ன் சிங், 20, (படம்) ஊடக உள்ளடக்கத்தைத் தயாரிக்கும் கோத்ரா வேங்கட சாய் ரோஹன்கிருஷ்ணா என்பவர் கேட்டுக்கொண்டதால் கிளார்க் கீயில் அந்தக் காணொளியை எடுத்தார்.

ஸ்பைடர்மேன் ஆடையை அணிந்து ரோஹன்கிருஷ்ணா செய்த சேட்டைகளை லீ படம் எடுத்தார். பொதுமக்களைப் பேட்டி எடுக்கும் அவரது திட்டத்துக்கு லீ உதவினார்.

லீ ஆறு மாதத்துக்கு தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டில் இருக்க வேண்டும்.

மேலும், அவர் 40 மணிநேரத்துக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லீயின் நன்னடத்தையை உறுதிசெய்ய $5,000 பிணைப் பத்திரத்தில் கையெழுத்திடும்படி அவரது பெற்றோருக்கு உத்தரவிடப்பட்டது.

உயரும் வெப்பத்தால் வனவிலங்குகள் அவதி, நடத்தையில் மாற்றம்

சிங்கப்பூரில் வெப்பம் உயரும் என்றும் 2045ஆம் ஆண்டுக்குள் சில நாள்களில் வெப்பம் 45 டிகிரி செல்சியசை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இங்குள்ள வனவிலங்குகளும் சில செல்லப் பிராணிகளும் அவதிக்கு உள்ளாகும் என்றும் அவை நடந்துகொள்ளும் விதம் மாறக்கூடும் என்று இயற்கை ஆர்வலர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர்.

மேலும், சில வகை உயிரினங்கள் அழியும் ஆபத்தும் ஏற்படலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சராசரி வெப்பநிலை உயர்ந்து வரும் நிலையில் இங்குள்ள வனவிலங்குகள் பூங்காக்களிலும் வாகனங்களிலும், வீடுகளிலும் நிழலுக்கு ஒதுங்கக்கூடும் என்று வெட்ட்ரஸ்ட் சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டியோ பூன் ஹான் கூறினார்.