வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) நகர மறுசீரமைப்பு ஆணைய (யூஆர்ஏ) கார் நிறுத்துமிடங்களில் வாகனங்கள் காத்திருக்கும் அவகாசம் 20 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.
செப்டம்பர் 1ஆம் தேதி இது நடப்புக்கு வரும். கொவிட்-19 கால பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் மேலும் தளர்த்தப்பட்டதை அடுத்து இது குறித்து கழகம் நேற்று அறிவித்தது.
பொருள்களை சென்றுசேர்க்கவும் வாகனமோட்டிகள் கார் நிறுத்த இடம் தேடவும் வாடகை வாகன ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றவும் இறக்கிவிட்டுச் செல்லவும் 15 நிமிடங்கள் போதும் என்று ஆவணங்கள் காட்டுவதாக கழகம் நேற்று கூறியது.
2020 ஏப்ரலுக்கு முன்னர், கார் நிறுத்துமிடங்களில் 10 நிமிடங்கள் மட்டுமே காத்திருக்க முடிந்தது.
கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில், இது 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டது. குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருந்தபோது, அவர்கள் அத்தியாவசியப் பொருள் களையும் உணவையும் அதிகமாக வாங்கினர். அவற்றை அவர்களிடம் சென்றுசேர்க்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.
மேலும், வரும் செப்டம்பர் 19ஆம் தேதியிலிருந்து, கார் நிறுத்துமிடக் கட்டணச் சீட்டுகளை வீவக கிளை அலுவலகங்களில் வாங்கவோ மாற்றவோ முடியாது என்று வீவக தெரிவித்தது.
மின்னியல் கார் நிறுத்த முறைகள் பல ஆண்டுகளாக நடப்பில் உள்ளன. மேலும், பார்க்கிங்.காம் 2017ஆம் ஆண்டு அறிமுகமானது. இதனால் தற்போது பத்து கார் நிறுத்துமிடங்களில் ஒன்பதில் கார் நிறுத்தக் கட்டணச் சீட்டுகள் தேவைப்படவில்லை. கட்டணச் சீட்டுகளின் விற்பனை 99 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் கழகம் கூறியது.
பெட்ரோல் நிலையங்கள், செவன்-இலெவன், சியர்ஸ் கடைகளில் கார் நிறுத்தக் கட்டணச் சீட்டுகளைத் தொடர்ந்து வாங்கலாம் என்றும் கழகம் சொன்னது.
வாகனமோட்டிகள் தாங்கள் பயன்படுத்தாத அல்லது காலா வதியான கார் நிறுத்தக் கட்டணச் சீட்டுகளை கழகத்தின் கிளை அலுவலகங்களில் கொடுத்து பணத்தை மீண்டும் பெறலாம்.

