உயரும் கடல் மட்டத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி 600,000க்கும் அதிகமான மாணவர்கள் கற்கவுள்ளனர். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுவர். அதற்கான ஈராண்டுத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
'ரைஸ் டு தி சேலஞ் II' எனும் அந்தத் திட்டம், பள்ளி அளவில் கடல்மட்ட உயர்வு பற்றி நடத்தப்படும் ஆகப் பெரிய விழிப்புணர்வுத் திட்டமாகக் கருதப்படுகிறது. திட்டத்தை 'கெப்பல் லேண்ட்' சொத்து நிறுவனம் நடத்தி வருகிறது.
2020ல் தொடங்கிய அதன் முதல் விழிப்புணர்வுத் திட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், கட்டட வாடகைதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் பயன்பெற்றனர். இவ்வாண்டு ஏப்ரலில் திட்டம் நிறைவடைந்தது.
இரண்டாவது திட்டத்தில் நேரடிக் கண்காட்சிகள், பயிலரங்குகள் போன்றவை நடத்தப்படும்.
கடல்மட்டம் உயர்வுக்கான காரணங்கள், அதன் பாதிப்புகள், பாதிப்புகளைக் குறைக்கும் வழிகள் உள்ளிட்ட அம்சங்களைப் பற்றி மாணவர்கள் கற்பார்கள்.
கண்காட்சிகளில் உள்ள தகவல்கள் தொகுக்கப்பட்டு எட்டு அத்தியாயங்கள் உள்ள மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு அது வழங்கப்படும். அதில் உள்ள தகவல்கள் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி பாடத்திட்டங்களுக்கு ஏற்றவாறு இருக்கும்.
இத்திட்டம் 2024ஆம் ஆண்டு நிறைவுபெறும். சுமார் 340 பள்ளிகளில் உள்ள 680,000 மாணவர்களும் பள்ளித் தலைவர்களும் அதில் பயன்பெறுவர் என்று 'கெப்பல் லேண்ட்' கூறியது.
சிங்கப்பூரின் 30 விழுக்காட்டு நிலப்பரப்பு, கடலைவிட ஐந்து மீட்டருக்கு குறைவான உயரத்தில் உள்ளது. வரும் 2100ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் கடல்மட்டம் 37 சென்டிமீட்டர் முதல் 78 சென்டிமீட்டர் வரை உயரக்கூடும் என்று அமெரிக்க, ஐயர்லாந்து ஆய்வாளர்கள் முன்னுரைத்துள்ளனர்.

