பேருந்தில் தன் பக்கத்தில் அமர்ந்த இந்தியப் பெண்ணை தன் முழங்கையால் இடித்து தன் பக்கத்தில் அமரக்கூடாது என்று கூச்சல் போட்டதாக 47 வயதான கோனி சோ மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒரே பேருந்து நிறுத்தும் இடத்தில் இறங்கியபோது, பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணை இனரீதியான அவதூறு சொல்லால் தூற்றியுள்ளதாகக் கூறப்பட்டது.
வலுக்கட்டாயமாக நடந்துகொண்டது, ஒருவரின் இன உணர்வுகளை காயப்படுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சோ மீது சுமத்தப்பட்டன. சோ குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.
சென்றாண்டு நவம்பர் 11ஆம் அன்று சம்பவம் நடந்தது. பேருந்து சேவை 51ல் சோவும் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணும் பயணம் செய்தபோது, சோ அவரை இன ரீதியில் தூற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்றவர்களின் இன உணர்வுகளை காயப்படுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் சோக்கு மூன்றாண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

