மின்னிலக்க, பசுமைப் பொருளியலில் கூடுதல் ஒத்துழைப்பு
சிங்கப்பூரும் மலேசியாவும் மின்னிலக்க, பசுமைப் பொருளியலில் கூடுதல் ஒத்துழைப்புக்கான கட்டமைப்புகளை நிறைவு செய்து உள்ளன.
ஆண்டிறுதிக்குள் இரு கட்டமைப்புகளிலும் கையெழுத்திடுவதற்கான பணியை மேற்கொள்ள இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்து உள்ளதாக சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது.
வளர்ச்சி வாய்ப்புள்ள இவ்விரு அம்சங்களிலும் இரு நாடுகளுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கு இந்தக் கட்டமைப்புகள் அடித்தளமாக விளங்குகின்றன.
வர்த்தக ஒருங்கிணைப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, மின்னிலக்கமயமாதல் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அம்சங்களில் கூடுதல் ஒத்துழைப்பை இந்த மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு வகைசெய்யும். அதோடு சிறிய, நடுத்தர நிறுவனங்களின் மின்னிலக்கமயமாதலையும் இது ஒருங்கிணைக்கும்.
சிங்கப்பூரும் மலேசியாவும் மின்னிலக்கப் பொருளியலில் அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதையை நோக்கிச்செல்லும் வேளையில் இரு நாடுகளிலும் உள்ள வர்த்தகங்கள், ஊழியர்கள், சமூகங்களுக்குப் பலன்தரும் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவது இதன் நோக்கம்.
பசுமைப் பொருளியலைப் பொறுத்தமட்டில், தங்கள் தொழில்துறைகளைக் கரிமமற்றதாக்கவும் வர்த்தகங்களும் ஊழியர்களும் வாய்ப்புகளைக் கைப்பற்றவும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
அடுத்த தலைமுறை நடமாட்டம், சுற்றுப்புற, சமுதாய, ஆளுமை கொள்கை பரிமாற்றங்கள், கரிம வெளியீட்டைக் குறைக்கும் தீர்வுகள் போன்ற அம்சங்களில் ஒத்துழைக்க சிங்கப்பூரும் மலேசியாவும் இணக்கம் கொண்டுள்ளன.
சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் மலேசியாவின் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் அஸ்மின் அலியும் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த ஒத்துழைப்புக் கட்டமைப்புகள் நிறைவு செய்யப்பட்டன.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தில் இவ்விரு ஒத்துழைப்புக் கட்டமைப்புகளும் புதிய மைல்கல்லைக் குறிப்பதாக திரு கான் கூறினார்.
"சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பசுமை, மின்னலக்கப் பொருளியலின் பல்வேறு அம்சங்களிலும் இரு நாடுகளுக்கு இடையே கூடுதல் ஒத்துழைப்புக்கு இந்த உடன்பாடுகள் அடித்தளமாக விளங்குகின்றன," என்றார் அவர்.
பசுமைப் பொருளியலில் இணக்கம் காணப்பட்ட ஒத்துழைப்பு, 12வது மலேசியா திட்டத்துடன் ஒத்துப்போவதாக திரு அஸ்மின் சொன்னார்.
பசுமை தொழில்துறைகளையும் சந்தைகளையும் ஊக்குவிப்பது, மாசுபாட்டைக் குறைப்பது, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது ஆகியவை இத்திட்டத்தின் இலக்காகும்.

