தென்கிழக்காசியாவில் உள்ள மழைக்காடுகள், கடல் தாவரம், சதுப்புநிலங்களை வரைபடங்களாக காட்டும் கருவி ஒன்று உருவாக்கப்படும். இயற்கைப் பாதுகாப்புக் குழுமமான மண்டாய் நேச்சர், பருவநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த பாதுகாக்கப்படக்கூடிய பல்லுயிரியல் நிறைந்த பகுதிகளை அடையாளம் காண இந்தக் கருவி உதவும்.
கூகல் நிறுவனத்தின் நீடித்த, நிலைத்தன்மை நிதியான google.org வழங்கும் $1.4 மில்லியன் பெறுமானமுள்ள மானியத்தின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.
இந்த வரைபடக் கருவியை உருவாக்க, இதர ஏழு லாப நோக்கமற்ற சுற்றுப்புற அமைப்புகளுடன் சேர்ந்து மண்டாய் நேச்சர் பணியாற்றும்.
இந்த எட்டு அமைப்புகளும் தென்கிழக்காசிய பருவநிலை, இயற்கை சார்ந்த தீர்வுகள் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
இந்தக் கருவியின் மூலம், வனவிலங்குகளையும் இயற்கை வனப்பகுதிகளின் பல்லுயிரியலையும் கூட்டமைப்பு பாதுகாக்க முடியும் என்று மண்டாய் நேச்சர் குழுமத்தின் தலைமை நிர்வாகி கவிதா பிரகாஷ் மணி கூறினார்.
தெமாசெக்கும் மண்டாய் வனவிலங்கு குழுமமும் 2020ல் மண்டாய் நேச்சர் குழுமத்தை அமைத்தன.
இந்தக் கருவியின் தொடக்கக் கட்டத்தை உருவாக்க கூகல் ஊழியர்கள் தங்கள் நிபுணத்துவத்தை இந்தக் கூட்டமைப்புடன் பகிர்ந்துகொள்வர்.
கூகல் சிங்கப்பூரின் 15வது ஆண்டு நிறைவு விழாவின்போது இந்த $1.4 மில்லியன் மானியம் நேற்று அறிவிக்கப்பட்டது.

