புருணை சுல்தான் இருநாள் அரசுப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகை
அதிபர் ஹலிமா யாக்கோப்பின் அழைப்பை ஏற்று, இருநாள் அரசுப் பயணமாக புருணை சுல்தான் ஹசனல் போல்கியா (படம்) இன்று சிங்கப்பூர் வருகிறார். அரசுப் பயணமாக அவர் சிங்கப்பூர் வருவது இது ஐந்தாவது முறையாகும். கடைசியாக அவர் 2017ல் இங்கு வந்திருந்தார்.
சுல்தான் போல்கியாவுடன் அவருடைய மனைவி, அரச குடும்ப உறுப்பினர்கள், புருணை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் இங்கு வருகை புரிகின்றனர் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இஸ்தானாவில் அவர்களுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். அவர்களைச் சந்திக்கும் அதிபர் ஹலிமா, அவர்களுக்கு விருந்தளித்து உபசரிப்பார்.
பிரதமர் லீ சியன் லூங்கும் அவருடைய மனைவியும் சுல்தான் போல்கியாவையும் அவருடைய மனைவியையும் சந்தித்து, அவர்களுக்குப் பகல் உணவு விருந்து அளிக்கவுள்ளனர். துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அவருடைய மனைவியும் சுல்தான் போல்கியாவையும் அவருடைய மனைவியையும் சந்திப்பர்.
சுல்தானையும் அவருடைய மனைவியையும் கௌரவிக்கும் விதமாக அவர்களது பெயரில் புதிய ஆர்க்கிட் மலர் திறந்துவைக்கப்படும்.
சுல்தான் போல்கியா செம்பவாங் ஆகாயப் படைத் தளத்திற்கும் செல்லவிருக்கிறார்.
$42 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதி
புக்கிட் பாத்தோக் இயற்கைப் பூங்காவிற்குப் பக்கத்தில் உள்ள குடியிருப்புப் பகுதி $42 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஒரு மாடி கொண்ட கார் பட்டறையும் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றும் அமைந்துள்ளன. வில்லங்கம் இல்லாத இச்சொத்து, ஜப்பானிய மோட்டார் வாகன விற்பனை, சேவை நிறுவனமான 'ஆட்டோபேக்ஸ் சிங்கப்பூரிடம்' தற்போது வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
ஓல்ட் ஜூரோங் சாலை, அப்பர் புக்கிட் தீமா சாலை அருகே அமைந்துள்ள இந்தக் குடியிருப்புப் பகுதி, தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது என அறியப்படுகிறது.
37,575 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள இப்பகுதி, எண் 30 புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6ல் அமைந்துள்ளது. 2019 பெருந்திட்டத்தின்கீழ் குடியிருப்புப் பயன்பாட்டிற்காக இப்பகுதி குறிக்கப்பட்டுள்ளது.

